சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழா நடந்த ஒய்.எம்.சி.ஏ மைதானமே ரஜினி ரசிகர்களால் நிரம்பியது.
இந்த கூட்டத்தில்
உற்சாகமாக பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை,
படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி
தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார்.
அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக
ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும்
ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.
சிவாஜிக்கு பின்னர்
ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை
கொண்டாடவில்லை. பின்னர் கோச்சடையான் படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம்.
அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. நேரம் வரும் போது
வழி, ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள் என்பதை கோச்சடையான் படத்தில்
இருந்து தெரிந்து கொண்டேன். பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை. 65 வயதான
நான், மகள் வயது உள்ள இளம் நடிகைகளுடன் நடிக்க கூடாது என்பதை இந்த படத்தில் இருந்து
புரிந்து கொண்டேன்.
அவ்வப்போது இமயமலைக்கு
போவேன். அங்கே போவதே கங்கையை பார்க்கத்தான். தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது
கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும்.
படத்திலும் சரி,
வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.
இவ்வாறு தோல்விகள் தொடர்ந்தது. உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க.
40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சால்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும்.
யார் என்ன சொன்னாலும்
என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். அந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன்.
அப்போது சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார். அவர் டான் கதையை சொன்னார். பாட்ஷாவுக்கு
பின்னர் மீண்டும் ஒரு டான் படத்தில் நடிப்பதா? என்று தயங்கினேன். ஏனெனில் ஒரே பாட்ஷா
தான். ஆனால் ரஞ்சித் மலேசியா அன்டர்வேர்டு டான் என்று கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன்.
அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி
இல்லை. அவர்மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதுமட்டுமின்றி அவர் தான் மட்டுமின்றி
தன்னை சேர்ந்தவர்கள் அனைவரும் உயரவேண்டும் என்று உழைத்தது என்னை மிகவும் கவர்ந்தது.
பின்னர் மறுபடியும்
ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது.
ஆனால் அரசியல் இருக்கும். நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மேட்டருக்கு
வருகிறேன். அரசியல் நிச்சயம் உண்டு, ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லையே, நான்
என்ன செய்வேன். நிச்சயம் நேரம் வரும்போது அரசியல் பற்று பேசுவேன்' என்று ரஜினிகாந்த்
பேசினார்.
Source : Indiaglitz