பிரஸ் மிட் இல்லை, ஆடியோ விழா இல்லை: அதீத நம்பிக்கையில் 'தமிழ்ப்படம் 2' குழு

ஒரு திரைப்படம் எத்தனை கோடியில் தயாராகி இருந்தாலும் அந்த படத்தின் புரமோஷனே வெற்றிக்கு முதல் காரணமாக உள்ளது. அந்த வகையில் பூஜை முதல் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர், ஆடியோ விழா, பிரஸ் மீட் என அடுத்தடுத்த புரமோஷன்களில் தான் ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. சரியான புரமோஷன் இல்லாமல் நல்ல படம் கூட தோல்வி அடைந்ததும், நல்ல புரமோஷன் காரணமாக சுமாரான படம் கூட வெற்றி அடைந்ததும் கோலிவுட் வரலாற்றில் அதிகம் உண்டு.

அந்த வகையில் நாளை வெளியாகவுள்ள 'தமிழ்ப்படம் 2' படத்தின் புரமோஷன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தின் ஆடியோ விழா, பிரஸ் மீட் என எதுவும் நடைபெறவில்லை. முழுக்க முழுக்க ஆன்லைன் புரமோஷன் பக்காவாக உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. அஜித், விஜய் படம் போன்று அதிகாலை காட்சிகளும் சில திரையரங்குகளில் ஏற்பாடு செய்திருப்பதே இந்த படத்தின் புரமோஷனுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் முதல் உள்ளூர் அரசியல்வாதி வரை, ரஜினி, கமல், அஜித், விஜய் முதல் நேற்று வெளியான 'மாநாடு' திரைப்படத்தின் அறிவிப்பு வரை அனைத்தையும் கலாய்க்கும் வகையில் படக்குழுவினர் உருவாக்கிய புரமோஷன் போஸ்டர்களே இந்த படம் வெற்றி பெற்றால் அதற்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கும். கோடி கோடியாய் செலவு செய்து இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு பதிலாக இனிமேல் கோலிவுட் திரையுலகினர் இதுபோன்ற புத்திசாலித்தனமான புரமோஷன்களை பயன்படுத்தினால் செலவும் குறைவாகும், அதிக ரசிகர்களை படம் ரீச் ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

Source : Indiaglitz

Read More about :

share