Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்

ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்

விஜய் என்னும் மாகலைஞனின் நடிப்பால் மட்டுமல்லாமல், தான் செய்த சில முக்கிய நிகழ்வுகள் மூலமாக என்றென்றும் நினைவில் நிற்கப்படுவார். ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும்தான். அதற்கு உதாரணங்கள்தான் இவை.

முக்கிய பிரமுகர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்புக்கு மத்தியில், அந்தப் பிரமுகர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால், சில முக்கிய நிகழ்வுகளில் நடிகர் விஜய்யின் வருகையானது சற்றே வித்தியாசமாக பிரதிபலிக்கும். அது விளம்பரமாக இருக்காது. தற்பெருமையும்-தம்பட்டமுமாய் இருக்காது. சத்தமின்றி ஒரு சாதனை என்பார்களே... அதுபோல விஜய்யின் சில வருகைகளும் அப்படித்தான் பார்க்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு சில உதாரணங்கள்...

ஜல்லிக்கட்டில் விஜய்

நடிப்பு என்பது எனது தொழில். என் இன மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது என்பது என் உரிமை என்பதை கலைத்துறைக்கு பறை சாற்றிய சம்பவம்தான் ஜல்லிக்கட்டில் விஜய் பங்கெடுத்தது. மக்கள் நலனே உயிர்மூச்சு என்று பக்கம் பக்கமாக உருகி பேசிய அரசியல்வாதிகளே அன்றைய வரலாறு படைத்த இளைஞர்களின் உணர்வு போராட்டமான ஜல்லிக்கட்டினை கண்டு அதிர்ந்தும், உறைந்தும் கிடந்தனர். அதே சமயத்தில், மக்களை ரசிகர்களாக்கி, அவர்களின் உணர்வுகளை பலவீனமாக்கி, ரசனைகளை மலிவாக்கி, எந்நேரமும் நம் கைப்பிடியில்தான் வைத்துள்ளோம் என இறுமாப்பில் கிடந்த திரையுலகினர் மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல், யாரைப்பற்றியும் யோசிக்காமல், ஜல்லிக்கட்டு இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பகிரங்கப்படுத்தப்பட்ட அறிக்கை

விஜய்யின் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் ரசிகர்கள் தமிழகத்தில் இன்றும் லட்சக்கணக்கில் உண்டு. ஆனால் தன் முகத்தை யாருமே பார்த்துவிடாமல் இருக்க நள்ளிரவு 2 மணிக்கு வந்த விஜய் அதிகாலை 5.30 மணி வரை முகத்தை கர்சீப்பால் மூடியபடியே வந்து தனது ஆதரவு தெரிவித்தார் விஜய். இதுமட்டுமல்லாமல் "உலகம் முழுதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான், அதை பறிப்பதற்கு இல்லை" என பகிரங்கப்படுத்தப்பட்ட அறிக்கையின் மூலம் அவரது தமிழினத்தின் வேட்கையை உலகுக்கு உணர்த்தினார்.

இதயம் கனத்து பேசிய விஜய்

அதேபோல, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கும் விஜய் சென்று ஆறுதல் கூறினார். அனிதாவின் வீட்டுக்கு விஜய் வரப்போகிறார் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், மரணம் குறித்து விசாரிக்க போகும் அனிதாவின் வீட்டாருக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை. திடீரென உள்ளே நுழைந்தார் விஜய். அப்போது அவர் அனிதாவின் அண்ணனிடம் இதயம் கனத்து அவர் என்ன பேசினார் தெரியுமா?

நானும் ஒரு அண்ணன்தான்

"அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள நினைத்திருந்தேன். ஆனால் நான் வந்திருந்தால், அது வேறு மாதிரியாக திசை திருப்பப்பட்டு இருக்கும் என்பதால் வரவில்லை. எனக்கு என்று ஒரு தங்கை இருந்தாள். அவள் இறந்துவிட்டாள். அவள் இறப்பு எங்கள் குடும்பத்தாரை அதிகமாக பாதித்துவிட்டது. அதனால் உங்களுடைய மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அனிதாவும் எனக்கு தங்கைதான். என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்களுக்கு கண்டிப்பாக செய்கிறேன். அனிதாவுக்கு நானும் ஒரு அண்ணன்தான், உதவி கேட்க தயங்க வேண்டாம்" என்று கூறி ஒரு போன் நம்பரையும் கொடுத்துவிட்டு சென்றார் விஜய். போகும்போது சும்மா போகவில்லை, அந்த குடும்பத்துக்கான நிதியையைம் அனிதாவின் தந்தையிடம் கொடுத்தார். அதுமட்டுமல்ல, நான் எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

கர்சீப்பால் மூடியபடி ஒரு பயணம்

சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பினார். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்திலும், அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி டோல்கேட் வரைக்கும் வந்துவிட்டார். அதன்பின்பு ஒரு பைக்கில் ஏறி உட்கார்ந்து, வழக்கம்போல் முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி, வாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு கோரமாக கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின், ஜான்சி, கிளாட்சன் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு போனார் விஜய். உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்கினார். இது போல பல சம்பவங்கள் விஜய் நடத்தியுள்ளார்.

இல்லங்களில் வாழும் விஜய்

அனைத்து இடங்களுமே தமிழகத்தை சூடாக்கிய மிக முக்கிய களங்கள். யுகமானாலும் மறக்க முடியாத சம்பவங்கள்,. இந்த இடங்களுக்கெல்லாம் ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி, களேபரமின்றி தன் இருப்பையும் தன்மான உணர்வினையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அனைத்து இடங்களுமே இருளில் சென்று வந்த இடங்கள். வீடுகளில் உட்கார சேர் எடுத்து போட்டாலும், துக்க வீடுகளில் குடும்பத்தாருடன் தரையில் அமர்ந்துதான் பேசினார். "வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்.. வையகம் இதுதானடா" என்ற கருத்தை ஆழமாக மனதில் வைத்துக் கொண்ட விஜய், தன்னுடைய நல்லியல்புகள் மூலம், தமிழன் என்கிற உணர்வினையும், மனிதன் என்கிற மனிதாபிமானங்களையும் தக்க சமயத்தில் உரியவர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் இல்லங்களிலும்-மனங்களிலும் என்றும் வாழ்ந்து வருகிறார் விஜய்.

Source : oneindia

Read More about :

share