சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி பேச்சு... கமல் தரும் விளக்கம் இது!


சென்னை: இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் ரஜினி பேசியதற்கு, இப்போது விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாஸன்.

சாக்கடையாற்றின் (பழைய அடையாறு) அருகே செவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் நண்பர் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம். இது, 'ரஜினிக்குக் கமல் சூளுரை' பாணி விளக்கம் அல்ல. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் எங்களுக்குள் உள்ள நட்பு, மூன்றாமவர் புகுந்து கெடுத்துவிட முடியாத புரிதல். 'வாங்க ரஜினி, வாங்க கமல்' என அறிமுகமாகி, காலப்போக்கில் 'வா... போ...' என்று நெருங்கி, இன்று மீண்டும் 'வாங்க... போங்க'வில் வந்து நிற்கிறோம். அப்படியென்றால் இருவருக்குமான அந்த 'வா போ' இணக்கம் இப்போது இல்லையா என்று கேட்டால், அப்படி அல்ல. இருவரும் ஒருவர்மீது மற்றவர் கொண்ட மரியாதையால்... பிற்காலத்தில் பெரிய மனிதர்களாக மாறக்கூடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்துகொண்டு ஆயத்தமானது, இந்த வயதை எட்டியபின் திரும்பிப்பார்த்தால் எங்களுக்கே வியப்புதான்.

தற்போது, மணிமண்டப விழா மேடைக்கு வருகிறேன். "இதை நீங்கள் அவரை அலைபேசியில் அழைத்தே பகிர்ந்திருக்கலாமே'' எனப் பலருக்குத் தோன்றலாம். விளக்கம் பொழிப்புரையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை; இந்த விளக்கம் புரியாதவருக்கானது. அதனால் இங்கே பகிர்கிறேன். "சிவாஜி சார் சினிமாவுல மட்டும் அல்ல. அரசியல்லயும் அவருடைய ஜூனியர்ஸுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார். தனிக்கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நின்னு அவருடைய தொகுதியிலேயே அவர் தோத்துப்போயிட்டார். அரசியல்ல வெற்றியடையணும்னா சினிமா, பேர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தா போதாது. அதுக்கு மேல ஒண்ணு ஏதோ இருக்கணும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்குச் சத்தியமா தெரியாது. கமல்ஹாசன் அவர்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தாலும் எனக்குச் சொல்லமாட்டார். 'நீங்க என் திரையுலக அண்ணன். நான் உங்க தம்பி. என்கிட்ட சொல்லணும்'னு கேட்டா, 'நீ என் கூட வா. சொல்றேன்' என்கிறார்.'' இதுதான் அன்று ரஜினி அவர்கள் மேடையில் சுருக்கமாகப் பேசியதன் சுருக்க வடிவம்.

எனக்கு இதில் சில கேள்விகள் எழுகின்றன. இதை மக்களிடம் பகிர்தல் கடமை என்பதால் பதிகிறேன். அரசியலில் வெற்றி என்றால் என்ன? தனிக்கட்சி தொடங்கி, அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, பெரும்பான்மையான இடங்களில் வென்று, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆவதா? அதையே வெற்றியாக வைத்துக்கொண்டாலும் அந்த வெற்றிக்கான அர்த்தம் என்ன? வெற்றிபெறவைத்த மக்களை, கையேந்த விடாமல் சுயமரியாதையுடன் வாழவைப்பதுதானே?
ஆனால், இங்கு அரைநூற்றாண்டு வெற்றிகளை வைத்து, கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் எத்தனை பேரை மேம்படுத்தியிருக்கிறோம்? சிலர் மேம்பாடு அடைந்திருக்கிறார்கள் என்பீர்கள். நான் பெரும்பான்மையான மேம்பாட்டைக் கேட்கிறேன். ஆனால், அப்படி யாரும் மேம்பாடு அடைய வில்லை என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். அப்படியெனில் அவர்களின் வெற்றி என்பதே அர்த்தமற்றுப்போகிறது என்றுதானே பொருள். இந்த வகையான வெற்றியை யார் பெற்றிருந்தாலும், அப்படி ஒரு வெற்றி தேவையே இல்லை என்பதே என் கருத்து.

Kamal Haasan's new explanation for Rajini's speech

ஆனால், உண்மையான வெற்றி எது என்று சொல்லவா? அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத கிழவனார் காந்தி, பெரியவர் பெரியார் இவர்களின் வெற்றிதான் காலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வெற்றி. நீங்கள் சொல்லும் வெற்றியாளர்கள் எத்தனையோ பேரை மக்கள் மறந்தும் காலப்போக்கில் மறுத்துமிருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் போட்டியிட்ட திரு. அம்பேத்கர் கண்டது தோல்வியல்ல, ஒரு மாபெரும் சரித்திரத்தின் ஆரம்பம். ஆனால், இவர்கள் மூவரையும் மறக்கவோ மறுக்கவோ முடியுமா? இவர்கள் இன்றும் நினைவு கூரப்படுகிறார்கள்.

மதவாத சக்திகளுடன் இங்கு மல்லுக்கட்டுவது யார்? நீங்கள் சொல்லும் வெற்றியாளர்களா? பெரியார் தந்த பகுத்தறிவுதானே அவர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது. இந்த மூவர் வரிசையில் யோசிக்காமல் சேர்க்கவேண்டிய இன்னுமொரு பெயர், ஆர்.நல்லக்கண்ணு. சுருக்கமாக தோழர் ஆர்.என்.கே. இவர் நின்ற தேர்தல்களில் ஒன்றில்கூட வென்றதே இல்லை. ஆனால், இந்த வயதிலும் பொதுநல வழக்கு, மக்கள் மேம்பாடு என்று பயணித்துக்கொண்டே இருக்கிறாரே, எதற்கு... நீங்கள் சொன்ன வெற்றியை மக்கள் அவருக்குத் தருவார்கள் என்றா? அவர் தன்னையும் வென்று மக்கள் மனங்களையும் வென்று வெகுநாள்களாகிவிட்டன. 

மக்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடும் அவரின் அந்த அன்புதானே அரசியலின் உண்மையான வெற்றி. என்னைப் பொறுத்தவரை 'அரசியல் வெற்றி' என்பது இதுதான்.
பேரவை உறுப்பினர், முன்னவர், பின்னவர், முதல்வர் ஆவதெல்லாம் அந்த வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான கூடுதல் சமாசாரங்கள்தான்."

-நன்றி: ஆனந்த விகடன்

Read More about :

share