8 தோட்டாக்கள் படம் விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதுமுக நாயகன் வெற்றி நடிப்பில் ஒரு வித்தியாசமான கதைகளத்தோடு வெளிவந்திருக்கும் படம் தான் ‘8 தோட்டாக்கள்’. படத்தின் போஸ்டர்களிலும், டீசரிலும் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

சிறு வயதில் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கிறார் நாயகன் சத்யா. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டன் ஒருவரின் உதவியால் படித்து போலீஸ் அதிகாரியாக(SI) வருகிறார் சத்யா. அமைதியாக யாரிடமும் பேசாமல் தான் உண்டு தனது வேலை உண்டுமாய் இருக்கிறார். 

இவருக்கு மேலதிகாரியாக வருகிறார் மைம் கோபி. ரவுடிகளிடம் லஞ்சப்பணம் வாங்கிக் கொண்டும் அவர்களுக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார். 

சத்யா மீதுள்ள ஒரு கோபத்தில் அவரது கையில் ‘8 தோட்டக்கள்’ உள்ள துப்பாக்கி ஒன்றை கொடுத்து தேடப்படும் குற்றவாளியை பின் தொடர கட்டளையிடுகிறார் மைம் கோபி. 

அவரை பின் தொடர்ந்து போகும் சத்யா, தன்னிடம் இருந்த துப்பாக்கியை ஒரு திருடனிடம் பறிகொடுத்து விடுகிறார். துப்பாக்கி பல கைகளுக்கு சென்று கடைசியாக எம் எஸ் பாஸ்கரனின் கைக்கு சிக்கி விடுகிறது. 

துப்பாக்கியை வைத்து ஒரு வங்கியில் கொள்ளையடிக்கின்றனர் எம் எஸ் பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளும். அப்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து அந்த வங்கிக்கு வந்திருந்த ஒரு சிறுமியின் நெஞ்சை பதம் பார்க்க, அந்த சிறுமியும் இறந்து விடுகிறார். 

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, நாசர் தலைமையில் ஒரு சிறப்பு போலீஸ் டீம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க களம் இறங்குகிறது. குற்றவாளிகள் பிடிப்பட்டார்களா.? மேலும் துப்பாக்கியில் மீதம் இருந்த அந்த 7 தோட்டாக்களின் பயணம் தான் இந்த ‘8 தோட்டாக்கள்’. 

படத்தின் நாயகன் சத்யா(வெற்றி) ஒரு அமைதியான கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் அனைத்து இடத்திலும் ஒரே ரியாக்‌ஷன் காட்டுவது சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது. 

நாயகி அபர்ணா முரளி கதாநாயகியாக தனது வேலையை செய்துள்ளார். தனது வேலையை காப்பாற்றுவதற்காக ஹீரோவின் சிக்கலான சூழ்நிலையை பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. 

படத்தின் ஹீரோ வில்லன் என அனைத்து பாத்திரத்தையும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் எம் எஸ் பாஸ்கர் தான். தன்னை ஒரு கதையின் நாயகனாகவும் கதையின் வில்லனாகவும் முன்னிறுத்திருக்கிறார்.

எப்போதுமே காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த எம் எஸ் பாஸ்கருக்கு, இந்த கதையில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். போலீஸில் சிக்காமல் இருப்பதற்காக அடுத்தடுத்து போடும் ப்ளான் பக்கா. 

சுந்தரமூர்த்தி இசையில் ஒரு பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னனி இசை கதையோட சேர்ந்த ஒரு பயணம். 

படத்தின் பலம் என்றால் அது ஒளிப்பதிவு தான். தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை. 

முதல் பாதியில் எடுத்த ஒரு வேகத்தை இரண்டாம் பாதி தடுத்தது சற்று சறுக்கல். வசனங்கள் அனைத்தும் கைதட்ட வைக்கின்றன. 

புதுமுயற்சிக்கு புதுமுக இயக்குனருக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்கலாம். 

8 தோட்டாக்கள் - தோட்டாக்களின் பயணம் விறுவிறுப்பு...

Rating :

0 1 2 2.8/5
share