Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஆண்டவன் கட்டளை படம் விமர்சனம்

ஆண்டவன் கட்டளை படம் விமர்சனம்

காக்கா முட்டை என்ற தேசிய விருது பெற்ற படத்தை நமக்கு தந்த இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ஆண்டவன் கட்டளை. தனது மூன்றாவது படைப்பாக இதனை கொடுத்திருக்கிறார் இயக்குனர். தற்போது இப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.

மதுரை மண்ணில் பிறந்தவர் காந்தி (விஜய் சேதுபதி). தனது குடும்பத்தின் கடன் பிரச்சனை காரணமாக தனது நண்பன் யோகி பாபுவுடன் லண்டன் செல்ல முடிவெடுக்கிறார் விஜய் சேதுபதி. இதற்காக சென்னை வரும் விஜய் சேதுபதியும் யோகிபாபுவும் ஒரு ஏஜென்சியை நாடுகின்றனர்.

அந்த ஏஜென்சி மூலம் விரைவில் விசா கிடைக்கும் என்பதற்காக தனக்கு திருமணமாகி விட்டதாக பொய் கூறி பாஸ்போர்ட் எடுத்து விடுகிறார் விஜய் சேதுபதி. மனைவியின் பெயர் கார்மேக குழலி என்று 

கூறி விடுகிறார். பின்னர், யோகி பாபுவிற்கு விசா கிடைத்து விட விஜய் சேதுபதிக்கு விசா கிடைக்காமல் போய் விடுகிறது.

பின்னர் வேறு வழியில்லாமல் நாசரின் நாடக கம்பெனியில் சென்று வேலை செய்கிறார் விஜய் சேதுபதி. அந்த நாடக கம்பெனியில் இருந்து லண்டன் செல்ல விஜய் சேதுபதியையும் அழைக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் இருந்து பொய்யாக போடப்பட்ட மனைவியின் பெயரை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விஜய் சேதுபதி. 

அதே பெயரில் இருக்கும் பெண்ணுடன் விவாகரத்து பெற்றால் மட்டுமே பாஸ்போர்ட்டில் அந்த பெயரை நீக்க முடியும் என்ற சூழல் வர, இதற்காக அதே பெயரில் இருக்கும் ரித்திகா சிங்கின் உதவியை நாடுகிறார் விஜய் சேதுபதி. இதற்கு ரித்திகா சிங் சம்மதித்தாரா... விஜய் சேதுபதியின் லண்டன் கனவு என்னவாயிற்று..?? என்பதை மீதி படத்தின் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் மிக கச்சிதமாக பொருந்த கூடியவர் விஜய் சேதுபதி. அதேபோல் தான் இந்த படத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏதுவாக பொருந்தியிருக்கிறார். சென்னையை நம்பி பிழைக்க வரும் இளைஞர்கள் வாடகை வீட்டில் படும் கஷ்டத்தை மிகவும் தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஊமையாக நடிக்கும் காட்சிகளில் தனது நடிப்பின் திறமையை வெளிக் கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. முதல் பாதியை மிக கலகலப்பாக கொண்டு சென்றது நம்ம யோகி பாபு தான். இவர் இல்லை என்றால் முதல் பாதி என்னதான் ஆகியிருக்கும் என்று யூகித்து பார்க்க முடியவில்லை. காமெடி காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார். இவர் ஸ்கிரீனில் தோன்றினாலே திரையரங்குகளில் சிரிப்பலைகள் கொட்டுகிறது. இயக்குனர்கள் ஏன் இன்னும் இவரை சரியாக பயன்படுத்தாமல் உள்ளார்கள் என்பது புரியவில்லை. 

இறுதி சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் தனது ஓங்கிய நடிப்பில் ஜெயித்திருக்கிறார் ரித்திகா சிங். தொலைக்காட்சி நிருபராக வரும் ரித்திகா படபடவென பேச்சில் வாளை வீசுகிறார். நாடக கம்பெனியின் ஓனராக வரும் நாசரின் நடிப்பு அருமை. மேலும், இலங்கை அகதியாக வரும் நபரின் நடிப்பும் அற்புதம்.

இசையமைப்பாளர் கே-யின் இசையில் ஒரு பாடல் கூட காதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் படத்திற்கு சறுக்கல்தான்.

முதல் பாதியில் காமெடியாக கதை சென்றாலும், இரண்டாம் பாதியில் "எப்பப்பா படத்தை முடிப்பீங்க" என்று ரசிகர்கள் எழுந்து கேள்வி கேட்கும் அளவிற்கு கதை நீள்வது போர் அடிக்க வைக்கிறது. அனைவரையும் உஷாராக இருக்க வைக்க வேண்டிய ஒரு கதையாக இது இருந்தாலும் அதை திரைக்கதையாக கொண்டு வரும் இடத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா இயக்குனரே...!! 

ஆண்டவன் கட்டளை - விஜய் சேதுபதியை ரசிப்பவர்கள் ரசிக்கலாம்...

Rating :

0 1 2 2.8/5
share