அறம் படம் விமர்சனம்சில வருடங்களாக நயன்தாரா தனக்கான படங்களை மிகவும் நுணுக்கமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘அறம்’ படத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் இயக்கியுள்ளார்.

மாவட்ட கலெக்டரான நயன்தாரா, அதிகாரத்தை மீறியதாக அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. எதற்காக அதிகாரத்தை மீறினேன் என்பதற்கான விளக்கத்தை நயன்தாரா விளக்குகிறார்.

படம் ஃப்ளாஷ் பேக்கிற்கு செல்கிறது....

ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் கஷ்டம். அங்குள்ள மக்கள் தண்ணீருக்கு பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை. அப்பகுதியின் மாவட்ட கலெக்டராக இருந்து வரும் நயன்தாரா நேர்மையான, நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கிறார். 

அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார். இப்படியாக சூழ்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகின்றது.


அதை தொடர்ந்து அந்த குழந்தையை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார்களா இல்லையா என்பதை மிகவும் படபடப்புடனும் உணர்ச்சி வசத்தோடும் கூறியிருக்கும் படம் தான் இந்த ‘அறம்’. 

நயன்தாரா படத்தின் ‘ஒன் ‘women' ஆர்மியாக’ களம் இறங்கி அடித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியராக இவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரமாகவும் அமைந்திருக்கிறது.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலே இயக்குனர் தனக்கான வசனங்களை சாட்டையாக சுழற்றியடித்திருக்கிறார். அரசியல்வாதிகளால் தான் அரசு ஊழியர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற சில உண்மை நிலவரத்தையும் படத்தில் சொல்லாமல் இல்லை.

சாதாரண தொழிலாளியாக வரும் ராம்ஸ், அவரது மனைவியாக வரும் சுனு லட்சுமி இருவரும் படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக அமையும்.

பல படங்களில் வில்லனாக தன் பார்வையால் மிரட்டிய ராம்ஸ், ஒரு தகப்பனாக இப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இவரின் மனைவியாக நடித்த சுனு லட்சுமி அல்டிமேட். தனது குழந்தையை காணாமல் தேடும் அந்த தேடலில் ஒரு உண்மையான தாயின் தேடலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

சமூகத்திற்கான தேவையான கருத்துக்களை கூறி சினிமாவிற்கான இயக்குனராக மட்டுமல்லாமல் மக்களின் இயக்குனராகவும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் கோபி நயினார். 

படத்தின் அடுத்த பலம் என்று கூறினால் அது இசையமைப்பாளர் என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்களும் சரி பின்னனி இசையும் சரி படத்தின் கதைக்கு பக்க பலமாக டிராவல் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஓமின் கேமரா காட்சிகளை மிகவும் தெளிவாகவும், சுழன்றும் அடித்திருக்கிறது. 

இயக்குனர் கோபி நயினார்க்கு மிகப்பெரிய பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.

அறம் - வென்றது...

Rating :

0 1 2 3 3.8/5
share