அவள் படம் விமர்சனம்


வாரத்திற்கு ஒரு முறை ஒரு பேய் படமாவது திரையரங்கு வந்து கொண்டிருக்கும். அந்த அளவிற்கு பேய் படங்களின் தாக்கம் கோலிவுட்டை சில காலம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அந்த காய்ச்சல் சில காலம் ஓய்ந்திருந்த நிலையில் ‘அவள்’ என்ற படத்தோடு மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கிறது. என்னதான் கூற வருகிறாள் இந்த ‘அவள்’ பார்த்துவிடலாம்.

சித்தார்த் ஒரு மருத்துவர். மூளை சார்ந்த அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த நிபுணர். இவரது மனைவி ஆண்ட்ரியா, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகு ஒரு அழகான மலைபிரதேசத்தில் தனியொரு பங்களாவில் வசித்து வருகின்றனர். 

இவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் அதுல் குல்கர்னியின் குடும்பம் குடியேறுகிறது. அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு குடும்பத்தினர்களும் நண்பர்களாகி விடுகின்றனர். ஒருநாள் இரவு இரு வீட்டார்களும் பார்ட்டியில் இருக்கும் போது, அதுல் குல்கர்னியின் மூத்த மகள் அங்குள்ள கிணற்றில் விழுந்து விடுகிறாள்.

அந்த பெண்ணை சித்தார்த் காப்பாற்றி விடுகிறார். பின் அந்த வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த அமானுஷ்யத்தின் தேடுதலே இந்த ‘அவள்’ ஆக அமைந்திருக்கிறது.

சித்தார்த்: சில பல படங்களுக்குப் பிறகு சித்தார்த்தின் ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு நடிப்பை இந்த படத்தில் காணலாம். க்ளைமாக்ஸ் காட்சிகளில் இவரின் நடிப்பு மிரட்டல்தான். ஆண்ட்ரியாவுடனான காதல் காட்சிகளில் மன்மதனாக விளையாடியிருக்கிறார்.

ஆண்ட்ரியா வழக்கம் போல் இளைஞர்களின் கனவு கன்னியாகவும், இளைஞர்களை ஏமாற்றாமல் தனது நடிப்பினை செவ்வென செய்து முடித்திருக்கிறார். 

பல பேய் படங்களின் வரிசையில் இந்த படமும் அமையலாம். ஆனால், தனக்கென ஒரு முத்திரையை பதித்துவிட்டுதான் சென்றிருக்கிறாள் இந்த ‘அவள்’. எந்தவொரு பாடல் காட்சிகளோ, காமெடி காட்சிகளோ என்றில்லாமல் பேய் படம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

கேமராவின் சுழற்சிகள், பின்னனி இசை இரண்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

அவள் - மிரட்டலில் வென்றிருக்கிறாள்...

Rating :

0 1 2 3 3.5/5
share