Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பைரவா படம் விமர்சனம்

பைரவா படம் விமர்சனம்


இளைய தளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பைரவா’. படத்தின் டீசர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. படத்தின் ட்ரெய்லரும் அதே எதிர்பாப்பினை கொடுத்திருந்தது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியான இப்’பைரவா’ ரசிகர்களை எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை பார்த்து விடலாம். 

சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்பவராக வருகிறார் விஜய். அந்த வங்கியின் மேலாளர் ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். தனது முயற்சியால் ஒய்.ஜி.மகேந்திரனை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றி விடுகிறார் விஜய். 

ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கவே விஜய் தான் காரணமாகிறார். அந்த திருமணத்தில் திருமணப் பெண்ணின் தோழியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பார்த்த கணமே அவர் மீது காதல் கொள்கிறார் விஜய். 

விஜய் கீர்த்தி சுரேஷிடம் காதலை சொல்லப்போகும் தருணத்தில் அவரை சுற்றி பல பிரச்சனைகள் இருப்பது தெரிய வருகிறது. தான் காதலிக்கும் பெண்ணிற்காக அந்த பிரச்சனையை தன் கையில் எடுத்துக் கொள்கிறார் விஜய். 

கதை, கீர்த்திசுரேஷ் பிறந்த ஊரான திருநெல்வேலிக்கு பறந்து செல்கிறது. திருநெல்வேலியில் விஜய் தனது ஆட்டத்தை எப்படி ஆடினார் என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு, பார்வை, வியப்பு, ஆச்சரியம் என அனைத்தும் விஜய் மட்டுமே. அழகு, ஆக்‌ஷன், டான்ஸ் என தனக்கே உரித்தான் ஒரு ஸ்டைலை இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய். 

காயினை எடுத்து கையில் விளையாடும் காட்சிகளில் ‘தி மாஸ்’. ‘யார் கிட்டயுமில்லாத ஒரு கெட்டப் பழக்கம் என்ங்கிட்ட இருக்கு, அது தான் சொன்ன வார்த்தய காப்பாத்துறது’ என்ற டயலாக் ஆரம்பிக்கும் போது ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் விஜய் அடிக்கும் ஒவ்வொரு அடியும் திரையரங்குகளில் விழும் இடி தான். அதகளமாக ஆடி ஒவ்வொரு அடியிலும் சிக்ஸர் அடிக்கிறார் விஜய். ஆக்‌ஷனோடு அருண்ராஜா காமராஜ் குரலில் ஒலிக்கும் ‘வரலாம் வரலாம் வா’ தீம் பாடல் மேலும் மிரள வைக்கிறது. 

படத்தின் கதை முழுவதும் கீர்த்தி சுரேஷை சுற்றியே நடக்கிறது. முதல் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் தான் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றன. விஜய் படம் என்றாலே அவரை மட்டுமே பார்க்க ரசிகர்களும், மக்களும் திரள்வார்கள். முதல் பாதியில் அரை மணி நேரம் அவர் இல்லாத காட்சிகள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி என இருவரும் வில்லன்களுக்கு பொருத்தமான தேர்வு தான். கத்தி படத்தில் விஜய்க்கும் சதீஷுக்கும் உண்டான கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் கைகொடுத்திருக்கிறது. தம்பி ராமையாவை கொஞ்சம் உபயோகப்படுத்திருக்கலாம்.

கல்வியில் நடந்து வரும் முறைகேடுகளை மிகவும் தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர் பரதன். நம்பர் ஒன் நடிகர் மூலமாக கல்வியில் ஏற்படும் முறைகேடுகள் வெளிவருவதால் அரசாங்க அதிகாரிகளால் இது சற்று உற்றுநோக்கப்படலாம். நீதிமன்றத்தில் விஜய்யின் உரையாடல்களில் பரதன் நிற்கிறார்.

சுகுமாரின் கேமரா, ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் அழகாகவே விளையாடியிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் ‘ வரலாம் வரலாம் வா’, ‘பாப்பா பாப்பா’ ஆகிய இரண்டு பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே.

அடுத்து என்ன நடக்கும் என்பதை ஈஸியாக கணிக்கும்படியான காட்சிகள் படத்திற்கு சற்று பின்னடைவு. மற்றபடி பைரவா ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து தான். 

பைரவா - பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்புவான்...




Rating :

0 1 2 3/5
share