Movie Reviews

  • Home/
  • Reviews/
  • போகன் படம் விமர்சனம்

போகன் படம் விமர்சனம்


சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ஜெயம் ரவி - அரவிந்த சாமி இருவர் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை படைத்தது தனி ஒருவன். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது ‘போகன்’ மூலமாக. ரோமியோ ஜூலியட் படத்தினை இயக்கிய லெக்‌ஷ்மண் இப்படத்தினை இயக்கியுள்ளார். ‘போகன்’ தனி ஒருவன் போல் விளையாடியுள்ளதா இல்லையா என்பதை பார்க்கலாம்.

அரசர் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த அரவிந்தசாமி கடன் சுமையால் தெருவுக்கு வர, மீண்டும் சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து சுக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அப்போது தான், அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு ஓலைச்சுவடி அரவிந்த சாமி கையில் கிடைக்கிறது. அந்த ஓலைச்சுவடியில் கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கான மந்திரம் எழுதப்பட்டியிருக்க, அதை பயன்படுத்தி வங்கி, நகைக் கடை என சில இடங்களில் பணத்தை கொள்ளையடிக்கிறார் அரவிந்த சாமி. 

வங்கி மேலாளராக வரும் நரேனை இந்த கொள்ளையில் மாட்டி விடுகிறார் அரவிந்த சாமி. போலீசார் நரேனை கைது செய்கின்றனர். தனது தந்தை நரேனை காப்பாற்ற இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயம் ரவி (AC). 

தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி நண்பன் போல் நடித்து அரவிந்த சாமியை கைது செய்கிறார் ஜெயம் ரவி. ஆனால், அரவிந்த சாமி தனது கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்துக் கொண்டு ஜெயம் ரவியின் உடலுக்குள் பாய்ந்து விடுகிறார். ஜெயம் ரவியின் உடலுக்குள் அரவிந்த சாமி இருந்து கொண்டு ஆடும் ஆட்டம் தான் இந்த ‘போகன்’. 

தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், மிருதன் என தொடர்ந்து பல முகங்களாக விளையாடி வரும் ஜெயம் ரவி, போகனிலும் தனது தனிப்பட்ட நடிப்பில் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளார். முதல் பாதியில் ஹீரோவாக பின்னியெடுத்திருக்கும் ஜெயம் ரவி, இரண்டாம் பாதியில் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளார். 

அரவிந்தசாமி முதல் பாதியில் வில்லத்தனத்தையும் இரண்டாம் பாதியில் ஹீரோயிசத்தையும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனி ஒருவனில் முழுக்க முழுக்க வில்லனாக வந்த அரவிந்த சாமி இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஹீரோ ஸ்கோரை செம்மையாக செய்திருக்கிறார். 

ஜெயம் ரவி ஜோடியாக வரும் ஹன்சிகா தனது குழந்தைத்தனமான நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார். ஜெயம் ரவி ஹன்சிகாவை பெண் பார்க்க வரும் நேரத்தில் ஹன்சிகா அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. பாடல் காட்சிகளில் அரவிந்த சாமி மற்றும் ஹன்சிகா காதல் விளையாட்டை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

’மழை வந்துச்சுனா குருவி, பறவையெல்லாம் கூட்டில் போய் இருந்திடும், ஆனா பருந்து மட்டும் தான் அந்த மேகத்துக்கும் மேல போய் பறக்கும்... நான் பருந்து டா’,  என  ஆரம்பித்து பல டயலாக் வரிகளை வாரிக் குவித்த இயக்குனர் லக்‌ஷ்மணை பாராட்டலாம்.

டி இமானின் இசையில் செந்துரா மற்றும் போகன் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை பல படங்களில் கேட்ட இசையாக தான் உள்ளது. செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக உள்ளது. 

பல இடங்களில் ஏற்படும் லாஜிக் மீறல்களை தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்குள் எப்படி ஒரு குற்றவாளி எளிதாக உள்ளே செல்ல முடியும்..?? க்ளைமேக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான லாஜிக் மீறல்கள். இருந்தாலும் ஜெயம் ரவி, அரவிந்த சாமி, ஹன்சிகா மற்றும் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

போகன் - போட்டி ஏதும் பெரிதாக இல்லாததால் சற்று நிலை கொள்வான்.. 

 

Rating :

0 1 2 2.8/5
share