வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, பிரேம் ஜி, நிதின் சத்யா, விஜய் வசந்த் மற்றும் பலர் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியானது சென்னை-28. அந்த வருடத்தில் வெளியான படங்களில் இது வசூலில் சக்கை போடு போட்டது. அதன் பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் அதே நடிகர்களை வைத்து சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.
இந்த இரண்டாவது இன்னிங்ஸ் இவர்களுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை வழங்கியதா இல்லையா என்று விமர்சனம் மூலம் காணலாம்.
முதல் பாகத்தில் நடித்த அனைவரும் சில வருடங்கள் கழித்து காட்டுவது போல் கதை தொடங்குகிறது. படத்தின் மெயின் ஹீரோ ஜெய் ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது.
அந்த திருமணத்தை பெண் வீட்டார்கள் தேனி பகுதியில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வைத்து நடத்த திட்டமிட்டு, அனைவரும் அந்த கிராமத்திற்கு செல்கின்றனர். ஜெய் அவரது நண்பர்களுடன் அந்த கிராமத்திற்கு வருகிறார்.
அந்த கிராமத்தில் சின்ன சின்ன அடிதடிகளை நடத்தி ஒரு தாதாவாக வாழ்ந்து வருகிறார் வைபவ். அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு பொய்யான வேலைகளை காண்பித்து ஜெயித்து விடுவார் வைபவ்.
இந்நிலையில் அந்த கிராமத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் போட்டியில் எதிர்பாராதவிதமாக ஜெய்யும் அவரது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டியதாகிறது. வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார்.
அந்த போட்டியில் தோற்றால் மட்டுமே அந்த போட்டோவை அழிப்பதாக கூறிவிடுகிறார் வைபவ். அந்த போட்டியில் தோற்றாலும், எப்படியோ அந்த புகைப்படம் வெளிவந்து ஜெய்யின் திருமணத்தை நிறுத்தி விடுகிறது.
ஜெய் தனது காதலியுடன் இணைந்தாரா..??? குடும்பத்தில் உள்ளவர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் நண்பர்களை இந்த கிரிக்கெட் கைவிட்டதா இல்லையா ..?? என்பதை மிக கலகலப்போடு கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு..
ஜெய், சிவா, விஜய் வசந்த், பிரேம் ஜி, நிதின் சத்யா என அனைவரும் தங்களது நடிப்பினை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர். முதல் பாகத்தில் கொண்டு வந்த அதே நடிப்பினை இந்த பாகத்திலும் கொண்டுவந்துள்ளனர்.
இரண்டாம் பாகத்தில் கிரிக்கெட்டோடு சற்று கமர்ஷியலும் சேர்ந்து கலந்து வருவதால் கதை அனைத்தும் விறுவிறுப்பாக நகர்கிறது. மிர்ச்சி சிவா வரும் இடமெல்லாம் சிரிப்பலை திரையரங்குகளை அதிர வைக்கிறார். படங்களுக்கு இவர் ரிவியூவ் கொடுப்பது ரசிகர்களிடையே க்ளாப்ஸ்.
வைபவ் இந்த படத்தில் ஒரு புது அவதாரம் தான். அதுவும் அவர் வரும்போது யுவனின் பின்னணி இசை மிரட்டல். படத்தின் மிகப்பெரிய பலமே யுவனின் இசை தான். மிரட்டியிருக்கிறார். எப்போதுமே அதிகமாக வாசிக்கும் பிரேம் ஜி இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.
முந்தைய பாகத்தின் காட்சிகள் இந்த படத்திலும் பல இடங்களில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.
ஆக்ஷன் கொஞ்சம், செண்டிமெண்ட் கொஞ்சம், காதல் கொஞ்சம், காமெடி கொஞ்சம் என அனைத்து பகுதியிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் வெங்கட்.
முதல் பாகத்தில் வந்த ஒரு மெலடி பாடல், ஆக்ஷன் பாடல் இரண்டுமே இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் தான். சொப்பண சுந்தரி பாடல் சற்று ஆறுதல்.
ராஜேஷ் யாதவ் வின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.
சென்னை 28 II - இரண்டாவது இன்னிங்சிலும் சிக்ஸர் அடித்துள்ளார் வெங்கட் பிரபு..