Movie Reviews

  • Home/
  • Reviews/
  • துருவங்கள் பதினாறு படம் விமர்சனம்

துருவங்கள் பதினாறு படம் விமர்சனம்அதென்ன ‘துருவங்கள் பதினாறு’... படம் ரிலீசாவதற்கு முன்பே பலரால் பேசப்பட்ட ஒரு படம், பலரால் அறியப்பட வேண்டிய ஒரு படம் என ஒரு ஓசையில்லா சத்தம் போல் வெளிவந்துள்ளது இப்படம். இந்த எதிர்பார்ப்பு உருவாக காரணம் என்னவென்று பார்த்தால் இப்படத்தினை இயக்கிய இயக்குனருக்கு வயது 21. அப்படி என்ன தான் இந்த கதையில் இருக்கிறது என்று சற்று அலசி ஆராய்ந்து விட்டு வரலாம்.

கோவை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார் ரகுமான். அவரது ஏரியாவிற்கு உட்பட்ட ஒரு பகுதியில் இரவில் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடப்பதாக ஒருவர் புகார் தெரிவிக்கிறார் ரகுமானிடம்.

புதிதாக பணியில் அமர்ந்த கெளதம் என்ற இளம் போலீசை அழைத்துக் கொண்டு இந்த வழக்கினை கையில் எடுத்து   பயணிக்கிறார் ரகுமான். இதை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு இளம் பெண் மிஸ்சிங் என்று ரகுமானுக்கு அழைப்பு வருகிறது. அந்த அப்பார்ட்மெண்ட் சென்று விசாரணை செய்கிறார் ரகுமான். 

இந்நிலையில், அதே இரவில் மூன்று நண்பர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு நபரை தெரியாமல் காரால் அடித்து விடுகிறார்கள். அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விடுகிறார். அந்த பிணத்தை அங்கேயே விட்டுவிட்டால் மாட்டி விடுவோம் என்று அந்த பிணத்தை தங்களது காரில் ஏற்றிக் கொண்டு சென்று விடுகின்றனர் அந்த மூவரும். மறுநாள் பார்க்கையில் அவர்கள் காரில் ஏற்றிக் கொண்டு வந்த பிணத்தை காணவில்லை. இந்த விஷயமும் ரகுமான் காதுக்கு எட்டி விடுகிறது.

துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தவர் யார்..?? அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா, இல்லை வேறு யாராவது கொலை செய்தார்களா..?? அப்பார்ட்மெண்டில் வசித்த அந்த பெண் எங்கே..??? காரில் ஏற்றிச் சென்ற அந்த பிணம் யார்..?? யார் அந்த பிணத்தை எடுத்துச் சென்றார்கள்..?? இந்த வழக்கினை பிடித்து பயணம் செய்யும் ரகுமான் குற்றவாளியை நெருங்கும் சமயத்தில், விபத்து ஏற்பட்டு ஒரு காலை இழந்து விடுகிறார் ரகுமான். இதனால் அந்த வழக்கை தேடும் படலமாக வைத்து அப்படியே வைத்து விட்டனர் காவல் துறையினர்.

சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதைக்கப்பட்ட அந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி தனது பரபரப்பை காட்டுகிறது... இதுவே படத்தின் கதை...

தீபக் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் ரகுமான் மிகக் கச்சிதமான ஒரு பொருத்தம். இதற்கு முன் இவர் பல படங்களில் தோன்றினாலும், இதுவே மிகச் சரி என அனைவரின் பாராட்டைப் பெறும் ஒரு ரோல். போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற எடை, உடை, உயரம், ஆங்காங்கே கொண்டுவரும் முகபாவனை என அனைத்திலும் தனக்கென்ற ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கியிருக்கிறார். 

புதுமுகங்களாக திரையில் தோன்றிய அந்த மூன்று நண்பர்களும் புதுமுகங்கள் போன்ற நடிப்பினை வெளிப்படுத்தாமல் கதைக்கேற்ற ஒரு நடிப்பினை வெளிக்காட்ட வைத்துள்ளார் இயக்குனர். 

மர்மங்கள் நடக்கும் அந்த இரவில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மழைச் சாரலில் நடைபெற்றிருக்கும். அந்த காட்சிகள் எடுக்கப்பட்ட விதத்தினை பார்த்த கணமே கூறிவிடலாம் இது வழக்கமான ஒரு படம் இல்லை என்பதை. வழக்கத்தை மாற்றிய அனைவராலும் திரும்பி பார்க்க வைக்கக் கூடிய ஒரு படைப்பு என்று. 

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அடுத்து என்ன நிகழும், அடுத்து என்ன நிகழும் என நம் அனைவரையும் சீட்டின் நுனியில், புருவத்தை உயர்த்தி பிடித்தவாறு உட்கார வைக்கிறது படத்தின் கதை. இந்நிகழ்வு படத்தின் கடைசி நிமிட காட்சி வரை இருப்பது மேலும் சிறப்பு.

ஹாலிவுட்டில் மட்டுமே இந்த மாதிரியான படத்தினை எடுக்க முடியுமா என்ன..? நம்மால் முடியாதா என்று தன் திறமையை செம்மையாக நிரூபித்திருக்கிறார்  இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படத்திற்கு பிறகு முன்னணி மாஸ் ஹீரோக்கள் இவரை தொடர்பு கொள்வது நிச்சயம். 

ஒரே ஷாட்டில் பல காட்சிகள், ஆச்சரியப்படுத்தி அசத்திருக்கிறார் கேமரா மேன் சுஜித் சரங்க். ஜாக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை படத்திற்கு சிறப்பான ஒரு பலமாக தான் இருக்கிறது. 

இயக்குநராக வரத் துடிக்கும் இளைஞர்கள், இந்த படத்தினை பார்த்து முழு சினிமாவையும் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கூறலாம். வரத்துடிக்கும் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், இருக்கும் இயக்குநர்களுக்கும் இது பொருந்தும். 

துருவங்கள் பதினாறு -  கிங் ஆஃப் மேக்கிங்...

Rating :

0 1 2 3 3.5/5
share