என் ஆளோட செருப்ப காணோம் படம் விமர்சனம்



சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக நிற்கதியாக நிற்கும் நிலையில், தனது கதை மற்றும் திரைக்கதையை வலுவாக கொடுப்பதில் புதுமுக இயக்குனர்கள் மட்டுமல்லாமல் கைதேர்ந்த இயக்குனர்களும் கவனம் செலுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளனர். 

இதற்கு முன் இரண்டு படங்களை இயக்கிய அனுபவம் இருந்தாலும்,  சில வருட இடைவெளிக்குப் பிறகு இளைஞர்களின் மனதை வருட ஒரு காதல் கதையோடு 
’என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தின் மூல்ம மீண்டும் வந்திருக்கிறார் இயக்குனர் ஜெகன். 

படத்தின் நாயகனாக வருகிறார் மெரினா, கோலிசோடா படத்தில் நடித்த தமிழ். நாயகியாக வரும் கயல் ஆனந்தியை முதல் முறை பார்த்த அந்த சமயம் காதலில் விழுகிறார் தமிழ். 

ஆனந்தி பேருந்தில் பயணம் செய்யும் போது தவறுதலாக அவரது ஒரு கால் செருப்பு தவறி விடுகிறது. பின் மற்றொரு கால் செருப்பை பேருந்திலேயே விட்டு விடுகிறார். ஆனந்தி செருப்பை தவறவிடும் அந்நேரத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது அப்பாவை தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள்.

இதனால், ஒரு குறிபார்க்கும் சாமியாரிடம் செல்லும் ஆனந்தி அவரது செருப்பு கிடைக்கும் நேரத்தில் அப்பா குறித்த நல்ல தகவல் கிடைக்கும் என சாமியார் கூறி விடுகிறார். இதனால் மனமுடைகிறார் ஆனந்தி.

தன்னுடைய காதலுக்காக நாயகிக்கு தெரியாமல் நாயகன் தமிழ் அந்த ஜோடி செருப்பை தேடி அலைகிறார். அந்த ஜோடி செருப்பு கிடைத்ததா...??? நாயகியின் தந்தை உயிரோடு கிடைத்தாரா..??? தமிழின் காதல் ஜெயித்ததா என்பதை மீதிக் கதையாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜெகன்.

முதல் முறையாக தனி ஹீரோவாக டிராவல் செய்திருக்கிறார் தமிழ். தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் தெளிவாகவும், இயல்பாகவும் செய்து முடித்திருக்கிறார். படத்தின் மற்றொரு நாயகனாக வருகிறார் யோகி பாபு. இவர் வரும் நேரத்தில் தியேட்டரில் சிரிப்பு வெடிகள் சிதறுகின்றன. இவர் இல்லையென்றால் பொறுமையை கொஞ்சம் சோதித்துதான் பார்த்திருப்பார்கள் போல...

கயல் ஆனந்திக்கு பல படங்களில் நடித்த ஒரு அனுபவம் இருந்தாலும், அழகாக வந்து மட்டுமே செல்லும் ஒரு கதாபாத்திரம் தான். இருந்தாலும் அழகான மழை நேரங்களில் அவர் வந்து செல்வதால் மழையோடு சேர்த்து அவரையும் ரசிக்க கண்கள் துடிக்கதான் செய்கிறது.

கே எஸ் ரவிக்குமார், சிங்கம் புலி, பால சரவணன், லிவிங்க்ஸ்டன், ஜெயபிரகாஷ் தங்களது கடமைகளை செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது எது என்றால் அழகான ஒளிப்பதிவு. மழை காட்சிகள் அனைத்திலும் காதல் செய்யும் தருணம் மனதை மெதுவாக வருடி செல்கிறது. இஷான் தேவ் இசையில் அபிமானியே பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகும். பின்னனி இசை ஓகே ரகம். 

அழகான எளிமையான ஒரு கதையை அழகான காட்சியமைப்புகளில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர்  ஜெகன். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லிகொள்ளலாம். 

’அட என்னப்பா ஒரு செருப்புக்கா இவ்ளோ அலப்பறை’ என்ற ஒற்றை வார்த்தைகளில் விமர்சனம் சொல்பவர்கள் ஏராளம் இருக்கலாம். 

Rating :

0 1 2 2.5/5
share