Movie Reviews

  • Home/
  • Reviews/
  • இறைவி படம் விமர்சனம்

இறைவி படம் விமர்சனம்

பீட்சா, ஜிகர்தண்டா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்போடு “இறைவி” படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். வழக்கம் போல் தனது ஹீரோக்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவை வைத்து கதையை ஆரம்பித்துள்ளார், அடுத்த அதிரடி நாயகனாக எஸ் ஜே சூர்யாவை இந்த படத்தில் வேறு ஒரு முகத்துடன் களம் இறக்கியுள்ளார் இயக்குனர்.

சிற்ப தொழிலில் பெயர் போன குடும்பம்தான் ராதாரவியின் குடும்பம். இவருக்கு இரண்டு மகன்களாக வருகிறார்கள் எஸ் ஜே சூர்யா மற்றும் பாபி சிம்ஹா. எஸ் ஜே சூர்யா ஒரு இயக்குனர், தனது முதல் படத்தை எடுத்துவிட்டு, தயாரிப்பாளர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தை வெளியிட மறுக்கிறார் தயாரிப்பாளர். இதனால் மனம் உடைந்து தினமும் மது அருந்துகிறார். எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக வருகிறார் கமாலினி முகர்ஜி. பாபி சிம்ஹா கல்லூரி மாணவராக வருகிறார்.

எஸ் ஜே சூர்யா குடும்பத்தில் வளர்ந்து வரும் விஜய் சேதுபதி, ராதாரவியின் குடும்பத்திற்கு நல்ல ஒரு விசுவாசியாக இருக்கிறார். கணவனை இழந்த பூஜா மீது காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் பூஜா அதை மறுக்க, வேறு வழியின்றி அஞ்சலியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும், பூஜாவை நினைத்துக் கொண்டே அஞ்சலியுடன் வாழ்ந்து வருகிறார்.

தயாரிப்பாளருடன் எஸ் ஜே சூர்யாவிற்கு பிரச்சனை அதிகமாக, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார் விஜய் சேதுபதி. இதனால் தனது குழந்தையுடன் தனித்து நிற்க வேண்டிய தருணத்திற்கு தள்ளப்படுகிறார் அஞ்சலி. மறுமுனையில், எஸ் ஜே சூர்யா மேலும் அதிகமாக மதுவிற்கு அடிமையாக அவரை விட்டு பிரிகிறார் கமாலினி.

இது போன்ற சூழ்நிலையில் இவர்களது வாழ்க்கையில் அடுத்து நடக்கவிருக்கும் அதிரடி கலந்த திருப்பங்களே இந்த இறைவி.....

இதுவரை நாம் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தை, ஒரு அழகான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. மதுவிற்கு அடிமையான கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. நடனத்திலும் அசத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பால் நம் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். கதையோடு ஒன்றிய ஒரு கதாபாத்திரம், பக்காவாக பொருந்துகிறார் இவர்.

வில்லத்தனம் கலந்த ஒரு கல்லூரி மாணவர் பாபி சிம்ஹா. மேக்கப் இல்லாமல், ஒரு ஏழ்மை குடும்ப பெண்ணாக வந்து நம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் அஞ்சலி. அஞ்சலிக்கு அங்காடி தெரு படத்திற்கு பிறகு ஒரு அழகான நடிப்பு என்றால் இந்த படத்தை நிச்சயம் கூறலாம். கமாலினி ஒரு குடும்ப பெண்ணாக வந்து நம் அனைவரின் அனுதாபத்தை வெகுவாக கவர்கிறார்.

ராதாரவி, வடிவுக்கரசி, கருணாகரன் என அனைவரும் கொடுத்த வேலையை பக்காவாக செய்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோ என்றால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான். அவ்வளவு ஒரு யதார்த்தமான ஒரு கதையம்சம். ஒரு குடுபத்தில் பெண்களை பற்றி சற்றும் சிந்திக்காத ஆண்களை பற்றிய ஒரு கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

அனைத்து ரக பார்வையாளர்களுக்கும் படம் பிடிக்குமா என்ற ஒரு கேள்வி..???? ஆபாச வார்த்தைகளை சற்று குறைத்திருக்கலாம்...

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம் போல் அசத்தியிருக்கிறார். சிவக்குமாரின் ஒளிப்பதிவும் படத்தில் பேசப்படுகிறது..

இறைவி - மனிதனை மீறிய “மனிதி”....

Rating :

0 1 2 3/5
share