இவன் தந்திரன் படம் விமர்சனம்


மசாலா படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஆர் கண்ணன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘இவன் தந்திரன்’. கெளதம் கார்த்திக் மற்றும் ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் மிக வித்தியாசமான கதைகளத்தோடு இன்று வெளிவந்திருக்கிறது. தந்திரமாக தப்பித்தானா, இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். 

இயக்குனர்களுக்கு கதை எதுவும் கிடைக்கவில்லை என்றால் சமுதாய பிரச்சனைகளில் எதாவது ஒன்றை கையில் எடுத்து வைத்து விடுவார்கள். அந்த சமுதாய பிரச்சனைகளிலும் மக்களுக்கு அவசியமான, அத்தியாவசியமான, தினமும் சந்திக்கும், தினம் தினம் போராடும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதுவும் மாணவர்களின் கல்வி பிரச்சனையை கையில் எடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை கடந்து ‘இவன் தந்திரன்’ என்ற படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கண்ணன். 

இந்த துணிச்சலுக்காகவே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரிய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். 

போதுமான வசதிகள் எதுவும் இல்லையென்று தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூட உத்தரவுவிடுகிறார் கல்வி அமைச்சராக வரும் சூப்பர் சுப்புராயன். கவுன்சிலிங் வரும் வரை இழுத்து மூடப்பட்ட கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவியர் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இழுத்து மூடப்பட்ட கல்லூரி ஒன்றின் முதல்வர், அமைச்சருக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து மீண்டும் தனது கல்லூரியை திறக்கிறார். லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தை மாணவர்களின் மூலம் அதிக கட்டணத்தில் வாங்குகிறார் அந்த தனியார் கல்லூரி முதல்வர். 

அந்த கல்லூரியின் மாணவியாக வருகிறார் நாயகி  ஷரத்த ஸ்ரீநாத். அவரின் நண்பர் ஒருவர் ஏழை குடும்பத்தை சார்ந்ததால் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். 

இந்த தற்கொலை நிகழ்வு நாயகன் கெளதம் கார்த்திக் கண்முன்னே நடைபெறுவதால், தவறை தந்திரமாக தட்டி கேட்க முயல்கிறார் நாயகன். இவர் ஆடும் தந்திர ஆட்டத்தில் அமைச்சர் என்ன ஆனார் என்பதே படத்தின் கதை. 

இப்படத்தில் இயக்குனரின் நாயகனாக வலம் வந்த கெளதம் கார்த்திக் மிக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல படங்களின் சரிவுக்குப் பிறகு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் கெளதம் என்று தான் சொல்ல வேண்டும். பல வசங்களில் உண்மையின் வெளிப்பாடு ஆங்காங்கே தெரிவதால் கதையோடு நம்மை பின்ன வைத்து விடுகிறார். 

நாயகி ஷரத்த ஸ்ரீநாத் அழகாக வந்து செல்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு கம்பளம் காத்திருக்கிறது. ஆர் ஜே பாலாஜியின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. சூப்பர் சுப்புராயனின் மிரட்டும் வில்லத்தனம் நம்மை பயமுறுத்துகிறது. கொஞ்சம் காட்சிகள் மட்டுமே வந்தாலும் மிரட்டுகிறார் ஸ்டண்ட் சில்வா.

தமனின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் பின்னனி இசையில் மிரட்டியெடுத்திருக்கிறார். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் காட்சிகள் அனைத்திற்கும் பலமாக இருக்கிறது. 

இவன் தந்திரன் - தந்திரமான வெற்றி.

Rating :

0 1 2 3/5
share