Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஜித்தன் 2 படம் விமர்சனம்

ஜித்தன் 2 படம் விமர்சனம்

ஹிட் ஆன பழைய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுத்து, தான் விட்ட மார்க்கெட்டை பிடிக்க ஓட்டம் காணும் பல நாயகர்களின் வரிசையில் ஜித்தன் ரமேஷும் இடம் பெறுகிறார்..... அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜித்தன் 2ன் ஆட்டத்தை சற்று காணலாம்...


தனது சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கிறார் ஜித்தன் ரமேஷ். தனது தந்தையின் கடைசி ஆசைப்படி தனது சொந்த ஊரான கொடைக்கானலில் சொந்தமாக ஒரு பங்களாவை விலைக்கு வாங்குகிறார். அதில் குடியேறிய நாள் முதல் அந்த பங்களாவில் இருக்கும் பேய் ஒன்று அவரை வெளியேறும்படி டார்ச்சர் செய்கிறது.


அந்த பேயை விரட்ட ரமேஷ் பல வழிகளில் முயற்சி செய்கிறார், ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அந்த பங்களா தனக்குதான்  சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது அந்த பேய். வழக்கம் போல் அந்த பேயுக்கும் ஒரு ப்ளாஸ்பேக், அந்த பேயின் தீராத ஆசையை ரமேஷ் தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக் கதை...


இடைவேளை வரை அப்படி, இப்படியாக கருப்பு உருவத்தையும், கேமராவை அங்கேயும் இங்கேயும் அசைத்து பயமுறுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான். பேய்க்காக பயந்து நடுங்குவதில் பழைய ஜித்தனை இந்த கதையிலும், அதே நடிப்பினை கொண்டு வந்ததற்காக ஜித்தன் ரமேஷை பாராட்டலாம். கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே பேயாக வந்து மிரட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் நம்மை கிரங்கடிப்பதற்காக வருகிறார்.


பேய் மனிதர்களுடன் பேசி ஊரை சுற்றி வரும் மயில்சாமி ஒரு கெளரவ வேடத்தில் வந்து நடித்திருக்கிறார். மேலும் ரோபோ சங்கர் போலிஸ் கெட்டப்பில் வந்து காமெடி செய்வதற்கு முயற்சி செய்கிறார். கடைசியாக யோகிபாபு வருவதனால் கொஞ்சம் கலகலப்பு ஏற்படுகிறது. பேயாக வரும் சிருஷ்டி டாங்கேவை பாவமாக காட்டுவதால் அனைத்து இடங்களிலும் சிறிதளவு கூட பயம் வரவில்லை.


ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் அனைவரையும் கொஞ்சம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். கதையில் விறுவிறுப்பை ஏற்றுவதற்கு இயக்குனர் அவ்வளவாக மெனக்கெட்டதாக தெரியவில்லை. ஒளிப்பதிவிலும் கவனம் இல்லை. பேய்ப்பட வரிசையில் இதுவும் ஒரு பேய்ப்படம் என கடந்து செல்ல தான் தோன்றுகிறது.


ஜித்தன் 2 - பித்தன் ஆகாமல் வந்தால் சரிதான்...!!

Rating :

0 1 2 2.5/5
share