Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஜோக்கர் படம் விமர்சனம்

ஜோக்கர் படம் விமர்சனம்


அதென்ன ஜோக்கர்... பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானதும் இது ஒரு அரசியல் சார்ந்த படம் என அனைவராலும் நினைக்கப்பட்டது. இது எந்த வகையான அரசியலை கூறுகிறது என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் சினிமாவில் தரமான படங்கள் சில சமயம் வந்து போகும், அப்படி வந்து போகும் சில படங்கள் மக்களின் மனதில் நிற்கும், அந்த கதைகள் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. இந்த கதையில் ’ஜோக்கர்’ ஆக இருப்பவர் யார் என்பதை பார்த்து விடலாம்.

குக்கூ என்ற நெகிழ்ச்சியான படைப்பிற்கு பிறகு, இரண்டாவது படைப்பாக ‘ஜோக்கர்’ என்ற இந்த படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்.

மன்னர் மன்னன்  இந்த கதையின் நாயகன். தன்னை ஒரு ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் மணல் கொள்ளையில் ஆரம்பித்து டாய்லெட் கட்டும் வரையில் நடக்கும் அரசியல் கொள்ளைகளை எதிர்த்து போராடும் ஒரு சாதாரண போராளி. இவருடன் ஒரு இளம்பெண் உதவியாளராக வருகிறார். வயதான ஒருவரும் சேர்ந்து இவருடன் போராடுகிறார். தனது மனைவியை கருணை கொலை செய்யும் படி நீதிமன்றத்தில் மனு கொடுக்கிறார். 


யார் இவர்...??? எதற்காக தன் மனைவியை கருணை கொலை செய்ய துடிக்கிறார்...??? எதற்காக போராளியாக மாறினார்..??? என்பதே படத்தின் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்.

நாயகன் குரு சோம சுந்தரம் கதையில் மன்னர் மன்னராக வாழ்ந்திருக்கிறார். கூத்துப் பட்டறையில் நான் தேர்ந்தவன் என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார் சோமு. சாதாரண மனிதன் தன்னை ஒரு ஜனாபதியாக தலை நிமிர்த்தி தூக்கி பிடிக்கும் காட்சிகளில் சோமு சுந்தரம் நிமிர்ந்து நிற்கிறார். ’ஒரு கண்ணில் காந்தியையும் மறுபக்கத்தில் பகத்சிங்கையும் வச்சிருக்கேன். கோபம் வந்தால் பகத்சிங்கை அவுத்துவிட்ருவேன் பாத்துக்கோ’ என அவர் கூறும் ஆவேச காட்சிகளில் நடிப்பின் உச்சத்திற்கே செல்கிறார்.

 கோவணப்போராட்டத்தில் ஆரம்பித்து வாயிலடித்துக் கொள்ளும் போராட்டம், காறித்துப்பும் போராட்டம், விஷப்பாம்புகளுடன் ஒரு நாள் என பல போராட்டங்களை நடத்தும் சோமுவை போலீஸார் கைது செய்ததும் இவரை வெளியில் எடுப்பதற்காகவும், சமூக போராட்டத்தில் நாட்டை மாற்றவும் போராடும் ஒரு போராளியாகவும் வருகிறார் ‘பொன்னூஞ்சல்’. இருவரும் நடத்தும் போராட்டங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பகிர்வது தோழி இசை.

 கணவனை மதுவிற்கு பலி கொடுத்து விட்டு, அநியாயங்களுக்கு குரல் கொடுப்பவராக வருகிறார் இந்த இசை. நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் சகாயத்திலிருந்து ஆரம்பித்து டிராபிக் ராமசாமி வரை பல தலைவர்களை கண் முன்னே வந்து நிறுத்தி செல்கிறது.

கதைக்கு மிகப்பெரிய பலமாக வருவது வசனங்கள் தான். ஒவ்வொரு வசனமும் சிரிப்பலைகளை எழ வைத்தாலும், மனிதனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. ’உழைக்கிறவன் வண்டியதான் போலீஸ் புடிச்சிட்டு போகும், எந்த ஸ்டேஷன்லையாவது பிஎம்டபிள்யூ காரோ அல்லது ஆடி காரோ இருக்றது பாத்திருக்கீங்களா’, ’நாட்டுல குண்டு வைக்கிறவன எல்லாம் விட்டுட்டு உண்ட கட்டி திண்ணுட்டு கோயில் தூங்குறவன வந்து பிடிங்க’,
’சமூக வலைதளங்களில் கூறும் கருத்து சுதந்திரத்திற்கு என்றுமே தடை விதிக்க கூடாது’, ’கக்கூஸை வைத்துக் கொண்டு ஊழல் செய்யும் உங்களிடம் நியாயத்தை எதிர்பார்த்தது தப்புதான்’, ’ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுவது தான் இன்றைய அரசியல்வாதிகளின் நிலை... இதற்கு பஜார்ல பிரார்த்தல் பிசினஸ் செய்து பிழைக்கலாம்’ என பல இடங்களில் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கு சவுக்கடி கொடுத்தாலும், சாதாரண மனிதனின் முகத்தில் அடிக்கவும் மறக்கவில்லை.

”அநியாயங்களை எதிர்த்து நாட்டுக்காக போராடும் எங்களை பார்த்தா  உங்களுக்கு ஜோக்கர் மாதிரி தெரிகிறதா..??? ஓட்டை விற்று பிழைப்பு நடத்தும் நீங்கள் தான் இந்த நாட்டின் ஜோக்கர்” போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. ’

ஷான் ரோல்டனின் இசையில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடலில் ஆரம்பித்து அனைத்து பாடல்களை ரசிக்கும் படியாகவும் சிந்திக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார். பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். உங்களுக்கு ஏன் இந்த அரசியல்வாதிகள் மேல் கோபம் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியவுடன் சோமு சுந்தரம் கூறும் அந்த சம்பவங்கள் அனைத்தும் சிந்திக்க வைக்கக்கூடிய கசக்கும் தேன் மிட்டாய்’.

பொன்னுஞ்சலாக வரும் ராமசாமி க்ளைமாக்ஸ் காட்சிகள் பேசும் வசனங்கள் அனைத்து மக்களுக்குமான ஒரு சவுக்கடிதான். மிக அருமையான ஒரு நடிப்பு.

சோமு சுந்தரத்தின் மனைவி மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன் கதைக்கு ஏற்ற ஒரு நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இசையாக வரும் காயத்ரி கிருஷ்ணன் பெண்களுக்கும் கொள்ளை அரசியலை எதிர்த்து போராடும் உரிமை இருக்கிறது, போராட வேண்டும் என்பதை வெளிக்கொணர்வதில்  வாழ்ந்து காட்டியுள்ளார்.

செழியனின் ஒளிப்பதிவில் தருமபுரி மாவட்டத்தின் அழகையும், அதை தாண்டிய பல இடங்களையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பாடல்கள் இடம் பெறும் காட்சிகளில்,வரிகளுக்கு ஏற்ற காட்சிகளை முன்னிறுத்திய எடிட்டர் வேலுசாமியை பாராட்டி தான் ஆக வேண்டும்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் இயக்குனர் ராஜூ முருகன். வாள் வீச்சு போன்ற வசனங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. ஒவ்வொரு வசனம் இடம் பெறும் இடத்திலும்  1000 அரசியல் பேசுகிறது.

ஹீரோவின் எண்ட்ரோ காட்சியில் இருந்து,  ’நாளை ஒரு போராட்டம்.... வீதிக்கு வா தோழா’ என படம் முடியும் காட்சிகள் வரை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு உண்ணதமான படைப்பு...

சினிமா என்பது பொழுதுபோக்கும் மட்டும் அல்ல மக்களின் மனநிலையையும், அவர்களின் போக்கையும் மாற்றும் ஒரு திருப்புமுனையாக கூட இருக்க முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சான்றுதான்.

ஜோக்கர் - அனைத்து குடிமகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு...

Rating :

0 1 2 3 3.8/5
share