காற்று வெளியிடை படம் விமர்சனம்


நடிகருக்கான ஒரு கூட்டம் எப்போதுமே நம் நாட்டில் இருக்கும். இந்த நடிகர் படம் வெளிவந்தால் நிச்சயம் பார்க்க வேண்டும் என்பது போல். இயக்குனருக்காகவும் படம் பார்க்க ஒரு கூட்டம் இருக்கும். அந்த வரிசை இயக்குனர்களில் எப்போதுமே முதல் இடம் வகிப்பவர் மணிரத்னம் என்றால் அது மிகையாகாது. 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் என்ற மூவரால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு தான் இந்த ‘காற்று வெளியிடை’. படத்தின் விமர்சனத்தை காணலாம். 

நாயகன் கார்த்தி ஏர்போர்ஸ் பிரிவில் பைட்டர் பைலட்டாக வேலை செய்கிறார். போரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் போது எதிர் அணியினரால் கார்த்தியின் விமானம் வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் கார்த்தி.

சிறையில் அடைத்ததும் கார்த்தியின் காதல் ப்ளாஷ் பேக் அலைகள் நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

ஒரு விபத்தில் கார்த்தி அவசரப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கிறார் மருத்துவராக வரும் நாயகி அதிதி. வழக்கம் போல் நாயகியை பார்த்ததும் நாயகன் காதல் வயப்படுகிறார். 

சில நாட்களில் நாயகிக்கும் கார்த்தி மீது காதல் ஏற்பட கெஞ்சல், கொஞ்சல், சண்டை, ஊடல், பாடல் என சில காலம் கடக்கிறது. திருமணத்திற்கு முன்பே அதிதி குழந்தைக்கு தாயாகிறார். அந்த கருவை ஏற்க கார்த்தி மறுக்க, கோபத்தில் கண் காணாத இடத்திற்கு சென்று விடுகிறார் அதிதி. 

அதே சமயத்தில் போரில் கார்த்தியும் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட, இறுதியாக பாகிஸ்தான் சிறையில் இருந்து கார்த்தி தப்பித்தாரா.? அதிதியை கண்டுபிடித்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை. 

அழகான ஷேவிங் முகம் கார்த்தி. பருத்தி வீரன் கார்த்தியை பார்த்து பழகியதால் ஷேவிங் கார்த்தியை ஏற்றுக் கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. கதையோடு ஒன்றிய ஒரு கதாபாத்திரம் தான் இந்த கார்த்தி. ஏற்கனவே மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக கார்த்தி பணிபுரிந்ததால், மணிரத்னத்தில் புரிதலை நன்றாகவே புரிந்து செயல்பட்டிருக்கிறார் கார்த்தி.  

அழகான தேவதையாக அதிதி. பல இடங்களில் கேமராவை வைத்து அதிதியை அழகாக காண்பித்தாலும், ஏனோ ஒரு வட முக சாயல் வந்து செல்வது நன்றாகவே தெரிகிறது. (கொஞ்சம் மைனஸ் தான்).

உயிரைக் கொல்லும் ஒருவன், உயிரைக் காப்பாற்றும் ஒருவள். இருவருக்குமான காதல் தான் இந்த காற்று வெளியிடை. கார்த்தியின் கதாநாயகன் கதாபாத்திரம் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சில இடங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார். திருமணத்திற்கு முன்பே ஊடல், குழந்தை என்பதை ஒரு பேஷனாகவே இந்த படத்தில் முன் வைத்திருக்கிறார் இயக்குனர். (தவிர்த்திருக்கலாம்)

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மட்டுமே. ரவி வர்மனின் கேமரா காட்சிகள் அனைத்தையும் ரசிக்க வைக்கிறது. இந்தியாவில் இப்படிபட்ட இடங்களெல்லாம் இருக்கிறதா என்பதை கண் வியந்து பார்க்கும் அளவிற்கு ரம்மியமான காட்சிகளை கொடுத்திருக்கிறார் ரவி. 

மற்றொரு பலம் ஏ ஆர் ரகுமான். பின்னனி இசையில் மிரட்டி எடுத்திருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகத்தில் படைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி சிறிது தொய்வு. 

காற்று வெளியிடை - இயக்குனர் மணிரத்னத்திற்கான காதலர்கள் கூட்டம்(மட்டுமே) படையெடுக்கும். 

 

Rating :

0 1 2 2.7/5
share