Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கடவுள் இருக்கான் குமாரு படம் விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு படம் விமர்சனம்



காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குநர் என முத்திரை பெற்றவர் எம். ராஜேஷ். தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து, அடுத்த இரண்டு படங்களில் சிறிய சறுக்கலை கொடுத்த இவர் வெற்றியை எட்டிப் பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜி வி பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர் ஜே பாலாஜி ஆகியோரை வைத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

விளம்பர கம்பெனி நடத்தி வரும் ஜி வி பிரகாஷ், ஆனந்தியை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஆனந்தியும் ஜி வி பிரகாஷை காதலிக்கிறார். திருமணம் செய்வதற்காக ஆனந்தியின் தந்தை எம் எஸ் பாஸ்கரை சந்திக்கிறார் ஜி வி. உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டுமே பெண்ணை தருவதாக எம் எஸ் கூறிவிடுகிறார்., பஞ்சாயத்திற்காக தனியார் சேனலுக்கு (பேசுவதெல்லாம் உண்மை) செல்ல, அங்கு இருவரின் காதலும் முறிந்து விடுகிறது.

இந்த சூழ்நிலையில், ஜி வி பிரகாஷ் குமாருக்கு வீட்டில் நிக்கி கல்ராணியை திருமணம் செய்ய வலியுறுத்த அவரும் ஓகே என கூறி நிச்சயதார்த்தமும் முடிகிறது. அதன் பிறகு பேச்சிலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி வரை ஆர் ஜே பாலாஜியோடு செல்கிறார் ஜி வி. பார்ட்டியை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் காரில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை ஜி விக்கு தெரியாமல் வாங்கி வைத்து விடுகிறார் ஆர் ஜே பாலாஜி.

அதை போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் பிடித்து விடுகிறார். அவரிடம் இருந்து இருவரும் தப்பித்து விடுகிறார்கள். ஒரு வழியாக போலிஸிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள், ஜி வி நிக்கியை திருமணம் முடித்தாரா அல்லது ஆனந்தியை ஏற்றுக் கொண்டாரா என்பதை கலகலப்புடன் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

வழக்கம் போல் குரலை உயர்த்தி பேசுவது, அழுது நடிப்பது, என தனது நடிப்பினை எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் ஜி வி. ஆனந்தியுடனான காதலாக இருக்கட்டும், நிக்கியுடனான ரொமன்சாக இருக்கட்டும் இரண்டையும் அழகாக செய்திருக்கிறார்.

அழகு பொம்மைகளாக வந்து செல்கின்றனர் கயல் ஆனந்தியும், நிக்கி கல்ராணியும். ஜி வி மற்றும் ஆனந்தியுடனான காதல் காட்சிகள் த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய இரு படங்களிலும் பார்த்த எபிசோடைத் தான் இதிலும் வைத்தது போல் தெரிகிறது.

நிக்கிக்கு பெரிதான ஒரு கதாபாத்திரம் எதுவும் இதில் இல்லை. ஆர் ஜே பாலாஜியின் கவுண்டர் காட்சிகள் இளைஞர்களின் மத்தியில் சிரிப்பலைகளை அதிகம் எழ வைத்திருக்கிறது. ஆர் ஜே பாலாஜி அடுத்தடுத்த லெவல்களை வெற்றிகரமாக கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்.

முதலில் சீரியஸான போலீஸ் அதிகாரியாக வந்து பின் காமெடி போலீஸாக அவதாரமெடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். அவருடன் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி இருவரும் காமெடி காட்சிகளில் சிறிது கலகலப்பூட்டுகிறார்கள்.

ஜி வி பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ரகம், பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சக்தி சரவணனின் கேமரா நல்ல வேலை செய்திருக்கிறது. எங்களுக்கு கதை வேண்டாம் சிரித்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு ‘கடவுள் இருக்கான் குமாரு’ கொஞ்சம் கலகலப்பூட்டும்.

கடவுள் இருக்கான் குமாரு - சிரிப்பு கொஞ்சம் சோதனை அதிகம்...

Rating :

0 1 2 2.4/5
share