கடுகு படம் விமர்சனம்


'கோலி சோடா’ படத்தின் மூலம் நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இயக்குநர் தான் விஜய் மில்டன். கோலி சோடா ஆச்சரியம் என்றால் விக்ரம் நடிப்பை வைத்து கொடுத்த ‘பத்து என்றதுக்குள்ள’ அடடே ரகம். தனது இரண்டு படங்களிலும் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் விஜய் மில்டன். தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இந்த ‘கடுகு’

முதலில் படத்தின் ஒரு சில ஒன் லைன் ஸ்டோரியை பார்த்து விடலாம்:

ஒருவரின் உருவத்தை பார்த்தும், அழகை பார்த்தும் அவரது மதிப்பை கணக்கிடுவது தவறு, 

இந்த சமுதாயத்தில் மற்றவர் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட கண்ணாடி முன்னாடி நின்னு பார்க்கும் போது நாம நமக்கு எப்படி தெரியுறோம் என்பது தான் முக்கியம்.??

இங்க தப்பானவங்க யாருன்னா, தப்பை தட்டி கேட்காம வேடிக்கை பார்க்கிற நல்லவங்க தான்.

சந்தர்ப்ப போதை ஒரு மனிதனை எதுவரையும் கொண்டு செல்லும்.

தப்பு பண்ணின(பண்ணாத) ஒரு பொண்ண, திருந்தினாலும் கூட தப்பான கண்ணோட்டத்துல தான் இந்த உலகம் பார்க்குமா.??

ஒதுங்கி போனா கோழைன்னு நினைக்கிறவன் தான் இந்த உலகத்துல கோழையா இருக்கிறான்.

கதைக்கு போய்டலாம்,

தமிழகத்தில் அழிந்து வரும் கலையில் ஒன்று தான் ‘புலி வேஷம்’. புலி வேஷம் கட்டி ஆடும் கலைஞன்தான் ராஜகுமாரன். கலை அழிந்து வருவதால் பிழைப்பிற்காக காவல் துறை ஆய்வாளராக வரும் வெங்கடேஷிடம் உதவியாளராக வந்து சேர்கிறார் ராஜகுமாரன். அதே ஊரில் இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுத் தருபவராகவும், ஊருக்கு நல்ல காரியங்களை செய்பவரும், அரசியலில் துளிர் விடும் ஒரு நபராகவும் வலம் வருபவர் பரத். 

இந்த ஊருக்கு மினிஸ்டர் ஒருவர் வருகிறார். அப்போது அந்த ஊரில் உள்ள ஒரு இளம் பள்ளி மாணவியை மானபங்கம் செய்ய முயல்கிறார் அந்த மினிஸ்டர். அந்த தப்பு நடைபெறும் போது தன் சுயநலத்திற்காக அமைதியாக இருந்து விடுகிறார் பரத். அதற்காக போராடும் ராஜகுமாரன், பிரஸிதா என சிலர் பாதிக்கப்படுவதுமாக கதை வேறொரு கட்டத்திற்கு நகர்கிறது. இறுதியாக படத்தின் க்ளைமாக்ஸ் என்ன என்பதே கதை.

ராஜகுமாரன் படத்தின் ஹீரோ. புலி பாண்டியாக வரும் இவரது வெகுளி தோற்றம் அனைவரையும் கவர்கிறது. பேஸ்புக்கில் இருந்து பேசுவது, நண்பனாக வரும் அனிருத் ராஜகுமாரனுடன் சேர்ந்து அடிக்கும் கலாட்டா என பல காட்சிகளில் கைதட்டல் வாங்கி செல்கிறார். 

பரத் மற்றும் ராஜகுமாரன் க்ளைமாக்ஸ் காட்சிகளில் போடும் சண்டைக் காட்சி அனைவரையும் சீட்டின் நுனியில் இருக்க வைக்கிறது. புலி வேஷம் கட்டிக் கொண்டு இவர் ஆடும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.

அழகான, கட்டுடல் இளைஞனாக வருகிறார் பரத். சுபிக்‌ஷாவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் அப்போ அப்போ அழகு தேவதையாக வந்து செல்கிறார். ஒரு சில இடங்களில் பரத் பேசும் வசனங்கள் அவருக்கான கைதட்டலை தனியாக வாங்கி செல்கிறார். நிச்சயமாக பரத்திற்கு இதுஒரு ப்ரேக் கொடுக்கும்.

டீச்சராக வரும் பிரசிதா தப்பு பண்ணாத போது, அவரை இந்த உலகம் தப்பாக பார்ப்பது, அவர் படும் இன்னல்கள் என ‘குற்றமே கடிதல்’ படத்தில் கொடுத்த அதே மிகையில்லா நடிப்பை இதிலும் கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ராஜகுமாரன் செயற்கையாக நடிக்க வைத்திருப்பது தெரிகிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவையும் இயக்குனரே கையாண்டுள்ளதால் அழகான காட்சிகளை வைக்க தவறவில்லை. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் தான். 

கடுகு - ”கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” குறையாமல் அளித்துள்ள தரமான கதை..

Rating :

0 1 2 3 3.3/5
share