Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கணிதன் படம் விமர்சனம்

கணிதன் படம் விமர்சனம்

இப்போதைய காலகட்டத்தில் ஒருவனுடைய வாழ்க்கையை நிர்ணயிப்பதில் படிப்பு ஒரு முக்கியமான சாதனமாக விளங்குகிறது. மிகவும் கஷ்டப்பட்டு படித்த படிப்பு நம் கையை விட்டுப் போகும் போது நமக்கு எப்படி இருக்கும்?? அப்படி ஒரு  அருமையான கதைக்களம் தான் இந்த கணிதன்.


பொதிகை சேனலில் செய்தி வாசிப்பாளராக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு ஒரே மகன் அதர்வா. தன் மகன் ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என அவருக்கு ஆசை. ஆனால் அதர்வாவிற்கோ எப்படியாவது பி பி சி சேனலில் நிருபராக ஆக வேண்டும் என்பது அவரது கனவு. 

அதற்கு முன் ஸ்கை டிவி என்ற பிரபலமாகாத ஒரு சேனலில் வேலை பார்க்கிறார். அந்த சேனலின் C E O வின் மகளாக வரும் கேத்ரின் மீது காதல் வயப்படுகிறார். அந்த காதலை அவரிடம் கூறும் போது அவரது கன்னத்தில் “பொளேர்” என்று அறை விழுந்ததும். சரி...படத்தின் கதையை துவக்கி விட்டார்கள் என்று தெரிகிறது. 

போலியான பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை வைத்து வங்கியில் பல கோடி வரை மோசடி செய்ததற்காக காவல் துறையினர் அதர்வாவை கைது செய்கின்றனர். அவரோடு சேர்த்து 5 பேரை கைது செய்கின்றனர். அதர்வா ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கிறார். 

போராடி ஜாமீனில் வெளியே வருகிறார். பின்னர், அப்பாவின் நண்பர் போலிஸ்காரரான பாக்யராஜ் ,”இந்த இடத்தில் நீ பாதிக்கப்பட்டவனாக பார்க்காமல், ஒரு ரிப்போர்ட்டராக இருந்து பார்” என்கிறார். அதன் பிறகு தான் அதர்வாவின் கணிதன் ஆட்டம் ஆரம்பிக்கிறது.

போலி சான்றிதழ் தயாரித்த கும்பலால் தனது வாழ்க்கையை போயிடுச்சே என்று கணிதன் சரியாக கணித்து அவர்களை பழி வாங்குகிறானா??? இல்லையா??? என்பதே படத்தின் மீதி கதை....

 அதர்வா தனது நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். வேகம், வீரியம், துள்ளல், இளமை, குறும்பு என அனைத்திலும் அருமையாக நடித்திருக்கிறார் அதர்வா. ஆக்‌ஷன் பிளாக்கில் பிண்ணியிருக்கிறார்.

மெட்ராஸ் படத்தில் பார்த்த கேத்ரின் ஆஆஆ இது??? என வியக்கும் அளவுக்கு அழகையும், அழகின் கீழ் அழகையும் கொட்டுகிறார் கேத்ரின் தெரசா அலெக்ஸாண்டர்.  
கருணாகரனுக்கும், சுந்தர் ராமுவிற்கும் காமெடிக்கு வேலை இல்லை என்றாலும் தனது கதாபாத்திரத்தின் அழுத்தத்திற்கு பொருந்துகிறார். வில்லனாக வரும் தருண் அரோரா பார்வையிலேயே மிரட்டுகிறார்.

படத்தின் பலமே வேகம் தான். அதிவேகம் என்றாலும் ஒரே ட்விஸ்ட்டை மறுபடியும் மறுபடியும் பார்க்க போர் அடிக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சூப்பர்...

இடைவேளைக்குப் பின் வரும் அந்த பர்த்டே பார்ட்டி மற்றும் பாடலை தவிர்த்திருக்கலாம். அந்த இடத்தில் பாடல் தேவைதானா இயக்குனரே???  ஒரு சில இடங்களில் சின்ன சின்ன லாஜிக் விஷயங்கள் உதைக்கின்றன.

இடத்திற்கு இடம் பல ட்விஸ்ட்டுகளை வைத்து நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர். நல்ல ஒரு கதையை நமக்கு தந்த இயக்குனர் சந்தோஷிற்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம். படத்தின் நேரத்தை சற்று குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

டிரம்ஸ் சிவமணியின் இசையில் ஒரு பாடல் மட்டுமே ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது.  பின்னணி இசை அவ்வளவாக எடுபடவில்லை. வேலைக்காக கன்சல்டன்சி. ஏஜென்ஸிக்கு செல்லும் மாணவர்கள்  இந்த படத்தை ஒரு முறை பார்த்துச் செல்லலாம்.

எது எவ்வாறாயினும் அதர்வாவின் ஆக்‌ஷன் ஆட்டத்தை பார்க்க ஒரு முறை திரைக்கு கணக்கு பார்க்காமல் “கணிதன்”ஐ பார்த்து விட்டுவரலாம்....

Rating :

0 1 2 3/5
share