கட்டப்பாவ காணோம் படம் விமர்சனம்

சிபிராஜ் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ளது ‘கட்டப்பாவ காணோம்’. எப்போதும் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் தன்னோடு மற்றொன்றையும் முன்னிறுத்து அதில் வெற்றியை பெற்றுக் கொள்பவர். அப்படி வெற்றிக்கண்ட படம் தான் நாய்கள் ஜாக்கிரதை. அதே பாணியை பயன்படுத்தி இந்த படத்தில் வாஸ்து மீன் ஒன்றை வைத்து களம் இறங்கியிருக்கிறார். இதுவும் வெற்றிக் கணியை பறித்ததா என்று பார்த்து விடலாம். 

தான் பிறந்ததில் இருந்து தொட்ட இடமெல்லாம் நன்மை நடக்காமல் கெட்டது மட்டுமே நடந்து வருவதால் சிபிராஜ்ஜை அனைவரும் ‘பேட் லக் பாண்டி’ என்றே அழைப்பதுண்டு. தனது வாழ்க்கையை தகப்பன் கூட குத்திக்காட்டும் நிலையில் சொந்தமாக தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இருக்கிறார். 

அப்போது ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் தனது தோழி சாந்தினி மூலம் சிபிராஜ்ஜின் வீட்டிற்குள் நுழைகிறது கட்டப்பா என்கிற அந்த வாஸ்து மீன். அந்த மீன் சிபிராஜ்ஜின் வீட்டிற்கு நுழைந்த பிறகு ’பேட் லக் பாண்டி’ என அழைக்கப்பட்ட சிபிராஜ்ஜின் வாழ்க்கையில் ஒரு மாறுதல் நிகழ்கிறது. அந்த மாறுதல் சிபிராஜ்ஜை வாழவைத்ததா இல்ல அழிய வைத்ததா என்பது தான் படத்தின் மீதிக் கதை. 

சிபிராஜ் வழக்கம் போல் தனது அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். கலகலப்பான காமெடிக் கதைக்கு டிராவல் செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்... படத்தின் போக்கு ஒரு விதமாக போகட்டும் என்பதில் அக்கறை காட்டிய இயக்குனர் கதையை வலுவாக்குவதில் கவனம் செலுத்த தவற விட்டுவிட்டார்.

காமெடி என்கிற பெயரில் இரட்டை வார்த்தை பேசும் வசனங்கள் சிரிக்க வைத்தாலும் குடும்பங்களின் மத்தியில் கண்டிப்பாக முகத்தை சுழிக்க வைக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு மட்டுமல்லாமல் கிளாமரிலும் தனது முன்னேற்றத்தை அடியெடுத்து வைத்திருக்கிறார். 

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது கதாபாத்திரத்தினை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.  பணம் கேட்டு சிபிராஜை மிரட்டி வீட்டிற்குள் நுழையும் திருமுருகன், காளி வெங்கட், ‘எமன்’ ஜெயக்குமார் இவர்களின் ரூட் மிரட்டலும் காமெடியும் சிரிக்க வைக்கிறது.. 
 
ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் இசையில் ஒரு பாடல் மட்டும் ரசிக்கும் படியாக உள்ளது. பின்னனி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சரியான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் அதை எடுத்துச் செல்லும் விதத்தில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்திருக்கிறார். 

கட்டப்பாவ காணோம் - கதையில் கொஞ்சம் வலுவை காணோம்...

Rating :

0 1 2 2.5/5
share