Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கோ 2 படம் விமர்சனம்

கோ 2 படம் விமர்சனம்


தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் பரபரப்பான அரசியல் கதையோடு இன்று வெளிவந்திருக்கிறது “கோ 2”. கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் “கோ”. இந்த படத்தின் டைட்டிலை எடுத்து ”கோ 2”வை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சரத். படத்தினை தயாரித்திருக்கிறார் எல்ரெட் குமார்.

கோ படத்தின் வெற்றி டைட்டில், தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் ஒரு அரசியல் படம் என இந்த இரண்டும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக வருகிறார் பிரகாஷ்ராஜ். இவரை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கும் பாபி சிம்ஹா கடத்துகிறார். யாரும் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தினை ஏற்படுத்தி அதில் பிரகாஷ்ராஜ்ஜை வைத்திருக்கிறார். மாநில முதல்வரை எதற்காக கடத்திருக்கிறார் என்று சொல்லாமல் கதையை இழுத்துக் கொண்டே செல்கிறார் பாபி சிம்ஹா. ஒரு கட்டத்தில் அவர் கடத்தியதற்கான காரணம் போலிஸ் நடத்தும் விசாரணையில் தெரிய வருகிறது. அந்த விசாரணையில் ஒரு முக்கிய அரசியல்வாதியும் சிக்குகிறார். யார் அவர்?? எதற்காக அவர் சிக்குகிறார்?? முதல்வர் மீட்கப்பட்டாரா?? பாபி சிம்ஹாவின் நிலைமை என்ன??? என்பதே படத்தின் மீதிக் கதை..

முதல்வராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் தன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என பல இடங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ்ஜிடம் பாபி சிம்ஹா பேசும் ஒவ்வொரு வசனமும் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நிஜமான சவுக்கடியாக விழுகிறது. முதல்வரை கடத்துவதற்கு பாபி சிம்ஹா போடும் மாஸ்டர் பிளான் சூப்பர்.

அழகு ராணி நிக்கி கல்ராணி... தனது நடிப்பை கொஞ்சும் சிரிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி காட்சிகளில் பால சரவணன் சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார். நடிகர் இளவரசு உள்துறை அமைச்சராக வருகிறார். அவர் நெற்றியில் வைத்திருக்கும் குங்குமத்தை பார்த்தாலே தெரிகிறது, இப்போது அரசியலில் இருக்கும் ஒருவரை தான் மையப்படுத்தியிருக்கிறார்கள் என்று..


லியோன் ஜோன்ஸ் இசையில் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது.
 
சமூக சேவகராக வரும் நாசர், அவரின் மகனாக வரும் கருணாகரன் என இருவரும் நடிப்பில் சூப்பர் பெர்பார்மன்ஸ்.... போலிஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய்யின் எகத்தாள நடிப்பு ரசிக்க வைக்கிறது. மழை வெள்ளம், டாஸ்மாக் வியாபாரம், சில்லறை வணிகத்தில் நடக்கும் கொள்ளை என சில இடங்களில் தைரியமான சில வரிகளை வைத்திருந்தாலும், வசனங்கள் அனைத்திலும் சற்று வலு இல்லாமல் தான் இருக்கிறது. சில இடங்களில் லாஜிக் நல்லாவே உதைக்கின்றது.

கோ 2 - சரியான தருணம்....

Rating :

0 1 2 2.8/5
share