Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மாநகரம் படம் விமர்சனம்

மாநகரம் படம் விமர்சனம்


தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல சினிமா என்று ஒன்று வருவது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகிவிட்டது. இந்த மாநகரம் ‘நல்ல சினிமா’ வரிசையில் இணைந்ததா இல்லையா என்று பார்க்கலாம்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வேலை தேடி வருகிறார் ஸ்ரீ. ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் இண்டர்வியூ முடித்து வேலையில் சேரும் தருணத்தில் மர்ம நபர்கள் சிலர் ஸ்ரீயை அடித்து அவரது சான்றிதழ்களை பறித்து விட்டு சென்று விடுகிறார்கள்.

மற்றொரு பக்கம் சந்தீப்பிற்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் ரெஜினாவின் காதலை முழுமையாக பெற முடியாத நிலையில் இருக்கிறார் சந்தீப். ரெஜினாவிற்காக ரவுடி கும்பலை சந்தீப் தாக்க, போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார் சந்தீப். மீண்டும் வெளியே வரும் சந்தீப்பை கொல்வதற்காக ரவுடி கும்பல் சுற்றுகிறது. 

இந்நிலையில் ஆள் மாறாட்டத்தில் சென்னையின் மிகப்பெரிய தாதாவின் மகனை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. 

இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளே ‘மாநகரம்’. இந்த மூன்று அணியினரும் என்ன ஆனார்கள் என்பதை மிகவும் விருவிருப்போடும் படபடப்போடும் நம்மை நகர வைத்துள்ளனர் இந்த ‘மாநகரம்’ குழுவினர். 

வழக்கு எண் 18/9 படத்திலே தனது லோக்கல் முகத்தை காட்டிய ஸ்ரீ, இந்த படத்தில் அடடே என்று கைதட்ட வைத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் இவருக்கு ஒரு ப்ரேக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

சந்தீப்பிடம் தமிழில் உங்கள் அறிமுக படம் எது என்று கேட்டால் ‘யாருடா மகேஷ்’க்கு பதிலாக ‘மாநகரம்’ என்று கூறலாம். அந்த அளவிற்கு கதையோடு ஒன்றிணைந்த ஒரு நடிப்பினை கொடுத்துள்ளார். மிகவும் பக்குவமான நடிப்பையும் கொடுக்க தவறவில்லை நம்ம ரெஜினா. 

படத்தில் கதை, திரைக்கதை மட்டுமல்லாமல் டெக்னிக்கலாகவும் அசத்தியுள்ளார்கள். செல்வக்குமாரின் கேமரா படத்தின் ஆரம்பத்திலே ஒரு த்ரில்லர் மூடை உருவாக்கி விடுகிறது. 

நாம் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது சார்லியின் கதாபாத்திரம். ‘ஊரா சார் இது.. யாராவது அடிச்சா, எதுக்கு அடிக்கிறீங்கன்னு யாருமே கேட்க மாட்டேன்றாங்க’ என ஸ்ரீ கூறும் போது ‘நாம கேட்கலையே சார்... அப்புறம் எப்படி சார் நமக்கு கேட்பாங்க’ என சார்லி கூறும் போது திரையரங்குகளில் கைதட்டல் கேட்கிறது. ’இந்த ஊரை பத்தி குறை சொல்லுவாங்களே தவிர இந்த ஊரை விட்ட போக மாட்டாங்க’,  இஞ்சினியரீங் படித்த அனைவரும் படித்த வேலையில் இல்லை என்பதை ஒரு காட்சியில் கொண்டு வந்து சொல்வது என ஒவ்வொரு ப்ரேமிலும் இயக்குனரின் மெனக்கெடல் தெரிகிறது. 

48 மணி நேரத்தில் சென்னையை சுற்றி நடக்கும் இந்த சம்பவங்கள் நம்மை சீட்டின் நுனியின் அமர வைக்கிறது. தவறான குழந்தையை தூக்கி வரும் போது முனிஸ்காந்தின் செயல்கள் நம்மை சிரிப்படைய வைக்கிறது. மாணவிகள், பெண்கள் மீது ஆசிட் அடிக்கும் கொடூரர்களுக்கு சரியான ஒரு தண்டனை கொடுக்கிறார் சந்தீப். என்ன தண்டனை என்பதை பார்ப்பதற்காகவாவது இந்த படத்திற்கு விசிட் அடித்து வரலாம். 

ரியாஸ்ஸின் பின்னணி இசை நம்மை கதையோடு இணைந்து பயணிக்க வைக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே செல்வக்குமாரின் ஒளிப்பதிவு என்றால் மிகையாகாது. 

எங்கெங்கோ பயணித்த கதை ஒரே இடத்தில் கொண்டு வந்து முடித்து வைத்திருப்பதற்காக இயக்குனருக்கு கைதட்டல் கொடுத்து விடலாம். மசாலா, காமெடி பட விரும்பிகள் இந்த படத்தை சற்று விரும்பாமல் போகலாம்.

படத்தின் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. 

மாநகரம் - ஒரு முறை சுற்றி விட்டு வரலாம்...Rating :

0 1 2 3 3.2/5
share