Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மாவீரன் கிட்டு படம் விமர்சனம்

மாவீரன் கிட்டு படம் விமர்சனம்வெண்ணிலா கபடி குழு மற்றும் ஜீவா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் மீண்டும் ஹாட்ரிக் வெற்றிக்காக உருவாக்கட்டது தான் இந்த ‘மாவீரன் கிட்டு’. இந்த கிட்டு வெற்றிக்கு கைகொடுத்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

பழனி அருகே ஒரு அழகான கிராமத்தில் 1980-90 களில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேல் ஜாதி,  கீழ் ஜாதி  என்று பிரிந்து கிடக்கும் மக்களை சுற்றி நடக்கும் கதை. 

 வழக்கம் போல், கீழ் ஜாதியில் ஒருவர் இறந்து விட்டால் மேல் ஜாதியினர் வாழும் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. கீழ் ஜாதியினருக்கு ஆதரவாகவும் அந்த மக்களின் தலைவராகவும் இருந்து வருகிறார் பார்த்தீபன்.

பல வருடங்களாக அந்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிய போராடி வருகிறார் பார்த்தீபன். கீழ் ஜாதியில் பள்ளி பருவத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார் விஷ்ணு விஷால். 

மேல் ஜாதியை சேர்ந்த ஹரீஷ் உத்தமன் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருக்கிறார். விஷ்ணு கலெக்டர் ஆகி விட்டால் நமக்கு ஆபத்தாகி விடும் என்று எண்ணி அவர் மீது பொய்யான வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை ஜெயிலில் கொண்டு சென்று அடித்து விடுகிறார் ஹரீஷ் உத்தமன். 

அடுத்த நாள் முதல் விஷ்ணு விஷால் காணாமல் போய் விடுகிறார். போலீஸ் தான் விஷ்ணு விஷாலை அடித்து கொன்று விட்டதாக காவல் நிலையம் முன்பு பார்த்திபன் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

விஸ்வரூபமாக அந்த போராட்டம் மாற, கடைசியாக விஷ்ணு விஷால் கிடைத்தாரா..??? அந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறியதா..??? என்ற சில பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான பதில்களாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

விஷ்ணு விஷாலுக்கு முன்பு பார்த்திபன் கதாபாத்திரத்தை பார்த்து விடலாம்.  சின்னராசு என்ற கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த பார்த்திபனுக்கு முதலில் ஒரு சல்யூட். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் உறைக்கும் ஒவ்வொரு குரலும் சவுக்கையடி. ’அடிக்க அடிக்க வாங்கிக்கொள்கின்றோம், திருப்பி அடித்தால் திமிருன்னு சொல்றீங்க.’, ’எங்களுக்கென்று தனியாக சட்டம் இயக்க வேண்டாம். இருக்கும் சட்டத்தை தான் நாங்கள் கேட்கிறோம்’ என்பது போன்ற யுகபாரதியின் வசனங்கள் எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றன. தனது பார்வையில் போராளிக்கான குணாதிசயத்தை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.

கிட்டு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக வரும் விஷ்ணு விஷால் தனது முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சுசீந்திரனுக்கும் விஷ்ணுக்கும் இடையேயான ஒரு புரிதல் இந்த படத்திலும் வெற்றி என நிரூபணமாகியிருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி முன்னணி நடிகருக்கான தளத்தில் விஷ்ணு விஷால் விரைவில் அமருவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

நாயகியாக வரும் ஸ்ரீ திவ்யா வெறும் பாடலுக்கு மட்டும் வராமல் படத்தின் ஒரு அங்கமாக வந்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் தனது திறமையை பதிவு செய்துவிட்டார். வில்லனுக்கான கதாபாத்திரத்தில்  ஹரீஷ் உத்தமன் மிரட்டல்.

இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யாவின் ஒளிப்பதிவு அருமை. யுகபாரதியின் வரிகளில் வசனங்கள் மற்றும் பாடல்கள் முனுமுனுக்கவைக்கின்றன. 

மிகவும் தைரியமான ஒரு பதிப்பினை பதிய விட்டு, அழகான, அமைதியான ஒரு புரட்சி போராட்டத்தினை நடத்திய சுசீந்திரனுக்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம். வாழ்த்துக்கள் சார்...

மாவீரன் கிட்டு - வீரனாக வென்றிருக்கிறான்... 


Rating :

0 1 2 3 3.2/5
share