மதுரவீரன் படம் விமர்சனம்



ஒளிப்பதிவாளராக நல்ல ஒரு பெயர் எடுத்த பி ஜி முத்தையா முதல் முறையாக இயக்குனராக களம் இறங்கியுள்ள படம் தான் இந்த ‘மதுரவீரன்’.  விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்க உடன் சமுத்திரக்கனி மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த மண் வாசனை கூட்டணி வீர நடை போட்டதா இல்லையா என்பதை பார்த்துவிடலாம்.

கதைக்களம் மதுரை அருகே உள்ள சிற்றூர் கிராமம். வயல் வெளி, ஜல்லிக்கட்டு காளைகள், வாடிவாசல் என வீர கிராமத்திற்கு பெயர் போன ஒரு ஊர் தான் இந்த சிற்றூர்

மலேசியாவில் இருந்து தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று தனது அம்மாவுடன் சிற்றூர் வருகிறார் சண்முக பாண்டியன். ஆனால், உண்மை என்னவென்றால் தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றது யார் என்று தெரிந்து அவரை பழி தீர்க்கவும், தனது ஊரில் நின்று போன ஜல்லிக்கட்டை நடத்தவும் தான் அந்த ஊருக்கு வருகிறார் சண்முகபாண்டியன்.

ஊரில் வேலாராமமூர்த்தி ஒரு ஜாதி இனத்தின் வீரியமாக நிற்க மற்றொருபுறம் மைம் கோபி அவருடைய ஜாதியை தூக்கி பிடித்து நிற்க இரு ஜாதியினருக்கும் ஏற்படும் மோதலால் பல வருடங்களாக அந்த ஊரின் ஜல்லிக்கட்டினை நிறுத்தி வைக்கிறார்கள்.

நின்று போன அந்த ஜல்லிக்கட்டு நடந்ததா..?? தனது அப்பா சமுத்திரக்கனியை கொன்றது யார் என்பதை சண்முகபாண்டியன் கண்டுபிடித்தாரா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

சண்முகபண்டியன் சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானாலும் இதுவே அவருடைய முதல் படம் என்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. காதல், சண்டை, செண்டிமெண்ட் என சில காட்சிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சமுத்திரக்கனி மீண்டும் தனது நடிப்பு முத்திரையை சிறப்பாக பதித்துள்ளார். கம்பீரமான நடை, மீசை என அவர் தோன்றும் காட்சியை தன் வசப்படுத்திவிடுகிறார்.

ஜாதிக்கு எதிரான குரல், விவசாயத்தை ஆதரித்து வரும் குரல் என மக்களிடையே எளிதில் சென்றடையும் படியான வசனத்தை வாரி இறைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மாரிமுத்து, தேனப்பன், வேலா ராமமூர்த்தி, மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். பால சரவணின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. படத்தின் சண்முக பாண்டியனின் நண்பர்களாக வரும் அருண்ராஜா மற்றும் சிலர் தங்களது காட்சிகளை கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். சிறிய காட்சியில் வந்தாலும் கதாபாத்திரத்தில் பொருந்தி செல்கிறார் சண்முக பாண்டியனின் தாய் மாமனாக வரும் யோகேஷ் கிருஷ்ணா. 

நாயகி மீனாக்‌ஷி துள்ளல் கொஞ்சலில் ரசிக்க வைக்கிறார். ஜாதியை தூக்கி பிடித்து இதுவும் ஒரு ஜாதிய படம் தான் என்று எண்ண வைத்தாலும், அழகான கிராமத்து நடைமுறை, வழக்கத்தை கண்முன்னே வந்து நிறுத்தியதால் மதுர வீரனை 
நிச்சயம் கொண்டாடலாம். 

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம்தான். பின்னனி இசை படத்தின் கதையோடு பயணம்தான்.

பி ஜி முத்தையா தனது கேமராவில் கிராமத்து அழகை கண்முன்னே வந்து நிறுத்தியிருக்கிறார்.

மதுரவீரன் - வீர நடை போடுவான் இந்த வீரன்....

Rating :

0 1 2 3/5
share