Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மனிதன் படம் விமர்சனம்

மனிதன் படம் விமர்சனம்

கெத்து படத்தின் சில சறுக்கலுக்குப் பிறகு உதயநிதி நடித்திருக்கும் படம் “மனிதன்”. சந்தானம், ஹரீஸ் ஜெயராஜ் என இவர்களை மட்டுமே நம்பி ஓடிக் கொண்டிருந்த உதயநிதியின் பயணம் சற்று திசை திரும்பி தன்னை மட்டுமே நம்பி இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் உதயநிதி. இதற்காகவே இவருக்கு ஒரு பலத்த கைதட்டலை வழங்கலாம்.

பொள்ளாச்சியில் வக்கீலாக படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் அனைவராலும் அவமானப்பட, ஒரு கேஸிலாவது ஜெயித்தால் மட்டுமே தனது மாமா பொண்ணு (ஹன்சிகா) தனக்கு கிடைக்கும் என்ற நிலை வந்தவுடன் சென்னைக்கு கிளம்புகிறார் உதய்.

அங்கு அவரின் மாமாவான விவேக்குடன் தங்குகிறார். அவரும் ஒரு வக்கீல். ஆனால் அவரும் கேஸ் எதுவும் கிடைக்காமல் கோர்ட் வளாகத்திலே ஊறுகாய் விற்று பிழைப்பு நடத்துகிறார். சென்னையிலும் உதய்க்கு ஒரு கேஸும் கிடைக்காமல் தள்ளாடுகிறார். மீண்டும் ஊருக்கே சென்றுவிடலாம் என்று நினைக்கும் போது தான் நாடே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

பிளாட்பாரத்தில் உறங்கி கொண்டிருந்த ஏழை மக்களை கார் ஏற்றிக் கொன்று விடுகிறான் ஒரு பணக்கார வீட்டுப் பையன். அவனுக்கு ஆதரவாக வாதாடுகிறார் இந்தியாவிலேயே நம்பர் ஒன் வக்கீல் பிரகாஷ் ராஜ். தான் ஒரு சிறந்த வக்கீல் என நிரூபிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜ்ஜை எதிர்த்து வாதாடுகிறார் உதய்.

இந்த வழக்கில் இவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?? என்பதே இந்த படத்தின் மீதிக் கதை..

இதுவரை உதயநிதி நடித்த படங்களிலே ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த படம் என்றால் மனிதன் என்று கூறலாம். அலட்டிக் கொள்ளாத ஒரு நடிப்பு, யதார்த்தம், முகபாவனை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் உதய். இந்த படம் உதய்க்கு ஒரு பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்றே கூறலாம்.

அழகான மாமா பொண்ணாக வந்து அசத்தியிருக்கிறார் ஹன்சிகா. உதய் சோர்ந்து வாடும்போதும், மனம் தடுமாறும் போதும் அவரை தூக்கி பிடிக்கும் ஒரு நல்ல சப்போர்ட்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹன்சிகா. டிவி ரிப்போர்ட்டராக வந்து தனது பணியை செம்மையாக நிறைவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விவேக் வழக்கம்போல் கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.

பிரகாஷ்ராஜ்ஜும், ராதாரவியும் நடிப்பில் சீனியர்கள் என்பதை அப்பட்டமாக காட்டிவிட்டனர். நேர்மையான ஒரு நீதிபதியாக வருகிறார் ராதாரவி. ராதாரவி பிரகாஷ்ராஜ்ஜை அடிக்க முற்படும் காட்சிகளில் திரையரங்குகளில் ஒரு வகையான நிசப்தம் நிலவுகிறது..

படத்தின் பல இடங்களில் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. பணக்கார வீட்டு பையன் ரோலை பலப்படுத்துவதிலும் சரி, பிரகாஷ்ராஜ்ஜின் ரோலை பலப்படுத்துவதிலும் சரி, உதயநிதியின் யதார்த்த நடிப்பை வெளிக்காட்டுவதிலும் சரி, இயக்குனர் அஹமத் அனைத்து இடங்களிலும் கிளாப்ஸ் அள்ளுகிறார்.

படத்தில் நடித்திருந்த அனைவரும் கதைக்கு தேவையான கதாபாத்திரங்களாகதான் இருக்கிறார்கள். முதல் பாதியில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கிறது படத்தின் கதை. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரகாஷ்ராஜ்ஜின் தரப்பு வாதத்தில் வலு இல்லாமல் இருப்பது, ஹீரோ எப்போதுமே ஹீரோயின் சொன்னா மட்டும் தான் நல்லவனா மாறனுமா என்னா?? இந்த கேள்விகள் படத்தில் சற்று எழுகிறது..

மற்றபடி படத்தின் கதை, கதாபாத்திரம் என அனைத்துமே சூப்பர் தான்..

மனிதன் - முழு தகுதியோடு பயணம் செய்வான்...
Rating :

0 1 2 3/5
share