Movie Reviews

  • Home/
  • Reviews/
  • முத்தின கத்திரிக்கா படம் விமர்சனம்

முத்தின கத்திரிக்கா படம் விமர்சனம்


அரண்மணை-2 படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கும் படம் “முத்தின கத்திரிகா”. மலையாளத்தில் “வெள்ளிமூங்கா” என்ற படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து இயக்கியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் ஆளே இல்லாத ஒரு தேசிய கட்சிக்கு மாவட்ட கட்சி தலைவராக எண்ட்ரீ கொடுக்கிறார் சுந்தர் சி. திருமணம் ஆகாமல் நாற்பது வயதை கடந்த இவர் தான் படத்தின் முத்தின கத்திரிக்கா.

தனது உள்ளூரிலே இந்த கட்சிக்கும் போட்டியாக இரண்டு கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளின் பெரிய தலைகளாக இருக்கிறார்கள் சிங்கம் புலியும், விடிவி கணேஷூம். இவர்கள் இருவரும் சுந்தர் சி க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

தனக்கு பிடித்தமான பெண் கிடைக்கமாட்டாளா என திருமணத்தை தள்ளிப்போட்டுவந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக பூனம் பஜ்வாவை சந்திக்கும் சுந்தர்.சி அவர் மீது காதல் வயப்பட்டு பெண் கேட்க செல்கிறார். அங்கே போனபின் தான் அவர் தனது பால்யகால தோழி கிரணின் மகள் என்பது தெரியவருகிறது. பூனம் பஜ்வாவின் தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமரியா, சுந்தர்.சியை அடித்து விரட்டுவதுடன், தனது மகளுக்கு பாரின் மாப்பிள்ளையான வைபவை திருமணம் பேசி முடிக்கிறார்..

 

இன்னொரு பக்கம் ராஜ்யசபா எம்பி ஆகும் வாய்ப்பு சுந்தர்.சியை தேடிவருகிறது. இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலும் வரவே, சுந்தர்.சியின் தொகுதியை கேட்டுவாங்கி அவரை எம்.எல்.ஏவாக போட்டியிட செய்து களம் இறக்கிவிடுகிறார் ஏற்கனவே எம்.பி கனவில் இருக்கும் அவரது கட்சியின் மாநில தலைவரான ஸ்ரீமன்.

 

வேண்டாவெறுப்பாக தேர்தலில் போட்டியிடும் சுந்தர்.சிக்கு வெற்றி கிடைத்ததா..? தன் விரும்பிய பூனம் பஜ்வாவை கைபிடிக்கும் யோகம் வாய்த்ததா என்பது ட்விஸ்ட் கலந்த க்ளைமாக்ஸ்.

 

சுந்தர்.சிக்கு (மட்டுமே) கச்சிதமாக பொருந்துகிற கதாபாத்திரம். ஃபோர், சிக்ஸரை குறிவைக்காமல் சிங்கிள், டபுளாக தட்டியே சதம் அடித்திருக்கிறார். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியின் உணர்வையும், அரசியலில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்கிற தவிப்பையும் சரியாக பிரதிபலித்திருக்கிறார். தம்பியின் குழந்தைகளை அம்மாவுடன் இருக்கவைக்க அவர் கையாளும் டெக்னிக் சரியான நரித்தந்திரம். அதைவிட தோழியின் மகளையே பெண்பார்க்க போவது செம லந்து.

 

கட்டுக்கோப்பான கவர்ச்சியில் கவனம் ஈர்க்க முயற்சிக்கிறார் பூனம் பஜ்வா. நீண்ட நாளைக்குப்பிறகு நடித்திருக்கும் கிரண், தனது பள்ளித்தோழனுக்கே தனது மகளை திருமணம் செய்துவைக்க முன்வரும் புதுமையான கேரக்டர். சுந்தர்.சியின் கூடவே கார் ட்ரைவராக பயணிக்கும் சதீஷ், அவ்வப்போது சின்னச்சின்ன கலாய்ப்புகளால் சுந்தர்.சியை வாரி கலாட்டா பண்ணுகிறார்...

 

அண்ணன் தம்பியாக வந்து அடித்துக்கொண்டு அரசியல் பண்ணும் விடிவி கணேஷும் சிங்கம் புலியும் இந்தப்படத்தில் ரசிக்கும் விதமாக செய்திருக்கிறார்கள். ரவுடியாக இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் யோகிபாபு, ஸ்க்ரீனில் வரும்போதே கைதட்டுகிறார்கள். ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், சுமித்ரா என துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.


ஒரு கதையை ரீமேக் செய்யும் போது ஏற்படும் செயற்கையான சில லாஜிக் விஷயங்கள் நன்றாகவே இதிலும் உதைக்கின்றன. ஆனாலும் பி செண்டர் மற்றும் சி செண்டர் ஆடியன்ஸ்களுக்கு பிடிக்கும் விதத்தில் தான் எடுத்திருக்கிறார்கள். முதல் பாதியில் வேகம் குறைவு என்றாலும், இரண்டாம் பாதியில் சூடு பிடித்து கதை நகர ஆரம்பித்து விடுகிறது...


இருந்தாலும் புதுமையான அரசியல் கலந்த காமெடி என்பதால் முத்தின கத்திரிக்கா ரசிகர்களுக்கு பிடிக்க தான் செய்யும்.... 

Rating :

0 1 2 2.6/5
share