ஒரு கிடாயின் கருணை மனு படம் விமர்சனம்


விதார்த் சாதரணமான ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். முப்பது வயதிற்கு மேல் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்ததும் தனது உறவினர்களுடன் குலதெய்வம் கோவிலுக்கு நேர்ந்து விட்ட கிடாயை பலி கொடுப்பதற்காக செல்கிறார். 
 
போகும் வழியில் ஒரு அசம்பாவிதம் நடைபெறுகிறது.. அதை தொடர்ந்து விதார்த்தின் நேர்த்திக்கடனுக்கு மட்டுமல்ல.. விதாரத்துக்கே சிக்கல் வருகிறது.. நேர்த்திக்கடன் நிறைவேறியதா.. விதார்த்தின் சிக்கல் தீர்ந்ததா இல்லை.. கிடாயின் கருணை மனு தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது மீதிக்கதை.

கிராமத்தில் கிடா வெட்டும் நிகழ்வு என்பது ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆனால், அந்நிகழ்வில் எதிர்பாராத சூழ்ல் ஏற்படும் போது மனிதர்களின் முகங்கள் எப்படி மாறுகின்றன என்பது ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தோடு பயணித்திருப்பது அருமை. 

அந்த இறுக்கமான சூழலிலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் காமெடிகள் ரசிக்கும் படியாகவே உள்ளது. 

புதுமுகம் ரவீணா கதைக்கேற்ற கலையான முகம். படத்தில் இடம்பெற்றுள்ள சித்தன் மோகன், வீரசமர் உள்ளிட்ட அனைவருமே காமெடியில் கலக்குகிறார்கள். குறிப்பாக படத்தில் வக்கீலாக வரும் ஜார்ஜ் தான் திருப்புமுனை கதாபாத்திரம்.... சாதாரணமாக ரெண்டு சீனில் வந்துபோய்விடுவார் என்று பார்த்தால் அவர்தான் முழுப்படத்தையும் வழி நடத்துகிறார். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் வக்கீல் என்றால் கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கவேண்டும் என்கிற படிப்பினையை அவர் கேரக்டர் வாயிலாக இந்தப்படம் உணர்த்தியுள்ளது.
 
சரணின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்து கெடாவெட்டு விருந்துக்கு போய்வந்த உணர்வை தருகிறது. ரகுராமின் பின்னணி இசையும் நேரம் ஆக ஆக மனதில் திகில் கூட்டவே செய்கின்றது.. யதார்த்தமான கிராமத்து மாந்தர்கள் மத்தியில் சில நேரம் சூழலுக்கு ஏற்றாற்போல் கள்ளம் புகுந்துகொள்வதையும் அதன் பின் விளைவுகளையும் அழகாக படம் எடுத்து இல்லையில்லை பாடம் எடுத்திருக்கிறார்கள்.
 
ஒரு கிடாயின் கருணை மனு – ரசிக்கும் படமாக தான் இருக்கிறது. 

Rating :

0 1 2 3/5
share