Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பசங்க 2 படம் விமர்சனம்

பசங்க 2 படம் விமர்சனம்

சற்றே துறு துறுப்பும், குறும்புத் தனமும்… ஜாஸ்தியாக உள்ள குழந்தைகளின் திறமைகளை கண்டறியத் தெரியா மாதா, பிதா , குரு உள்ளிட்டவர்களுக்கு தெய்வமாய்., நின்றுவழிகாட்டி, “குழந்தைகளை அதனதன் போக்கிலேயே விட்டு வளர்க்க வேண்டும்…” எனப் பாடம் சொல்லித் தரும் கருவை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் பாடம் தான் பசங்க – 2.

சூர்யா, கார்த்திக்குமார், ‘முனிஸ்காந்த’ ராமதாஸ் உள்ளிட்டோர் கதையின்நாயகர்களாகவும், அமலா பால், பிந்து மாதவி, வித்யா பிரதீப் ஆகியோர் நாயகியராகவும, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய ஆரெல் கரோலி இசையில் ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் & இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸூம் இணைந்து தயாரித்து வழங்கியுள்ள படம் தான் ‘பசங்க – 2’.

என்ஜினியரான கார்த்திக்குமார் – பிந்து மாதவி தம்பதியினரின் மகளும், வங்கி அதிகாரியான “முனிஸ்’காந்த் – வித்யா பிரதீப் தம்பதியினரின் மகனும் ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளா? ஒவர் ஆக்டிவிட்டீஸ் சுட்டீஸ் – குட்டீஸ்களா..? என்பது பெற்றோருக்கு தெரிய வருவதற்குள் நான்கைந்து பள்ளிகள், ஐந்தாறு குடியிருப்புகளில் இருந்து அந்த குடும்பங்கள்., மேற்படி, பிள்ளைகளுக்காகவே, பிள்ளைகளாலேயே… இடம் பெயரவேண்டிய சூழல்.

இந்நிலையில்., அங்கு சுற்றி, இங்கு சுற்றி., அதுவரை ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத இரு குடும்பங்களும் தாம்பரம் அருகே ஒரே குடியிருப்புக்கும், குழந்தைகள் இரண்டும் ஒரே பள்ளிக்கூடத்திற்கும் வந்து சேர., கொஞ்ச நாளில் குழந்தைகளின் குறும்புதனத்தால்., அந்தகுடியிருப்பிலும் இரு குடும்பத்திற்கும் கெட்ட பெயர். இதன் பிறகும் பொறுத்துக் கொள்ள முடியாது… எனப் பொங்கி எழும் பெற்றோர்., பால் மணம் மாறா பிஞ்சுகளை தங்கள் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு ஹாஸ்டலில் அடைத்து ஹாயாகின்றனர்.

ஆனால், அந்த ஹாஸ்டலிலும் அவப்பெயரை சுமந்து கொஞ்ச நாளிலேயே குடியிருப்புக்கு திரும்பும் மேற்படி, குழந்தைகளை தங்கள் குழந்தைகள் மாதிரி சமத்துப்பிள்ளைகள்… ஆக்குகிறோம் … என வலிய களத்தில் குதிக்கின்றனர .. அதே குடியிருப்பில் வசிக்கும் தம்பதிகளான டாக்டர் சூர்யாவும், டீச்சர் அமலாபாலும்… சூர்யா – அமலா பால் தம்பதியரின் முயற்சிபலித்ததா? கார்த்திக்குமார், ‘முனிஸ்’ ராம்தாஸ் குடும்பங்கள், குழந்தைகள் சந்தோஷத்தில் பல் இளித்ததா…? என்னும் வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது… இயக்குனர் பாண்டிராஜின் பசங்க – 2 படம் மொத்தமும்!


கதையின் நாயகர்களாக சூர்யா, கார்த்திக்குமார், ‘முனிஸ்’ ராமதாஸ் என மூன்று நாயகர்கள்…. அதில், இப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சூர்யா முந்திக் கொண்டு நடித்திருக்கிறார்.. அவர், டாக்டராக நடிப்பது, நன்றாகவே தெரிவது பலவீனம்… கார்த்திக்குமார், ‘முனிஸ்காந்த்’ ராம்தாஸ் இரு குடும்ப தலைவர்களில் சின்ன, சின்ன திருட்டுகளை செய்யும் “கிளப்டோமேனியா” வியாதி யுடைய வங்கி மேலாளர் முனிஸ், நடிப்பில் முத்திரைப் பதித்து முன்னிலை பெறுகிறார்.

கதையின்நாயகியராக அமலா பால் டீச்சராக சற்றே அலட்டல் என்றாலும், மிரட்டல். ஆனால், நிஜத்தில் திருமணம் ஆகி விட்டதாலோ என்னவோ., கணவராக இதில் நடித்திருக்கும் சூர்யாவுடன் அம்மணிக்கு இல்லை ஒட்டுதல்… கார்த்திக்குமாரின் ஜோடியாக வரும் பிந்து மாதவி, முனிஸ்’ஸின் ஜோடி வித்யா பிரதீப் இருவரும் நடிப்பில் அமலா வைக் காட்டிலும் இயல்பாக நடித்து இயன்றவரை ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல் .

மற்ற, பிறநட்சத்திரங்களாக வரும் சுட்டி குட்டீஸ் ஸாய் வரும் மாஸ்டர் நிசேஷ், பேபி வைஷ்ணவி, அருஷ் உள்ளிட்டோர் கச்சிதம். மெய்யாலுமே குழந்தைகளிடம் ரொம்பவே அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். வாவ்! சிறப்புபள்ளி தாளாளர் கேரக்டரில் வரும் டைரக்டர் ஆர்.வி .உதயகுமார், கெஸ்ட் ரோலில் வரும் காமெடி சூரி, டைரக்டர் சீனு ராமசாமி உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு , கண்களில் ஒற்றிக்கொள்ளக் கூடிய ஓவியப்பதிவு., ஆரெல் கரோலியின் இசையில் ‘சோட்டா பீமா….’ உள்ளிட்ட நான்கு பாடல்களுமே குழந்தைகளுக்கான குதூகலாம். பிரவின் கே.எல். லின் படத்தொகுப்பு அவசரகதியில் முடியும் க்ளைமாக்ஸ் தவிர்த்து பிற இடங்களில் பக்காதொகுப்பு.

‘அதிக பீஸ் அவங்க தான் வாங்கறாங்க அப்ப அவங்க தானே பெஸ்ட் ஸ்கூல்’ ‘நம்ம காலத்துல பள்ளிக்கூடத்த கவர்மெண்ட் நடத்துச்சு… ஓயின்ஷாப் பை தனியார் நடத்துனாங்க… இப்போ, ஸ்கூல்ஸை தனியார் நடத்துறாங்க., ஒயின்ஷாப்பை கவர்மெண்ட் நடத்துது… அதான், இப்படி… ‘, ‘உங்க ஸ்கூல்ல பசங்க தமிழ்ல கெட்ட வார்த்த பேசுவாங்க, இங்க இங்கிலீஷ்லகெட்ட வார்த்த பேசுவாங்க… அதான் வித்தியாசம்…’ ”இந்த உலகிலேயே சிறந்த வகுப்பறை தாயின் கருவறை… ” , “குழந்தைகளை நாம குழந்தைகளா நினைச்சா தான் பெரியவங்கள அவங்க பெரிய வங்களா மதிப்பாங்க… ” , ”குழந்தைங்க எப்பவுமே கெட்ட வார்த்தை பேசமாட்டாங்க கேட்ட வார்த்தையதான் பேசுவாங்க….. ஆட்டோ ஓட்டும்போது…. அப்பாவா., நீங்க எவ்ளோ பேசி பிருப்பிங்க….? ” ‘நம்மளவிருந்தக்கு கூடப் பிட்டு அவங்களுக்கு பிடிச்சத சமைச்சு வச்சிருப்பாங்க….’ , ‘இது , ஒரு வித நோய் கிளப்டோமேனியாங்கறது அதோட பேரு…. லெப்ட்ஹேண்ட் மாதிரி தெப்ட் ஹேண்ட் பழக்கம்… அவ்வளவுதான், சைக்கோ தெரபியில அதசரி பண்ணிடலாம்…..’ ‘குழந்தைகளை பெத்த எங்களை ‘டாய்ஸ் விற்பவர்முதல் ஸ்கூல் நடத்துபவர்கள் வரை எலலோரும் ஏமாத்துறாங்க… எனக்கு 500 ரூபாய்க்குடிரஸ் எடுத்துட முடியுது ஆனா என் குழந்தைக்கு 1550 வரை ஒவ்வொரு முறையும் டிரஸ் செலவு ஆகுது.. ஏன் , இப்படி?’ ”பசங்க மனசில் மதிப்பெண்கள் விதைப்பதைவிட மதிப்பான எண்ணங்கள்.. விதைப்பது நல்லது… ” இப்படி பாண்டிராஜின் எழுத்து இயக்கத்தில் பலவற்றையும் பேசியிருககும், தொட்டிருக்கும் பசங்க – 2 படத்தின வசனங்கள் பெரும் பலம்!

பாண்டிராஜின் எழுத்து, இயக்கத்தில் பசங்க – 1 படத்தைக் காட்டிலும் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி பொட்டில் அறைந்த மாதிரிமுடிந்திருக்க வேண்டிய க்ளைமாக்ஸ்., பொசுக்கென முடிவது மட்டுமே குறை… மற்றபடி, மொத்தப் படமும் பெரிதாக குறையே இல்லாதநிறையே.

மொத்தத்தில் ”பசங்க – 2 படத்தை குழந்தைகளோடு, குடும்பத்தோடு பார்க்கலாம் – 20 முறை ! பாராட்டலாம்-200 முறை.Rating :

0 1 2 3 4/5
share