Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பவர் பாண்டி படம் விமர்சனம்

பவர் பாண்டி படம் விமர்சனம்


தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என பல படங்களில் பலர் இவரை கேலி செய்த காலம் போய், கேலி செய்தவர்கள் எல்லாம் இவரது கால்ஷீட்டிற்காக மணிக்கணக்கில் காத்திருப்பது என்பது தனுஷ் விஷயத்தில் தான். தனது திறமையை கொண்டு தமிழ் சினிமாவில் தற்போது உட்ச நட்சத்திரமாய் மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அடுத்தபடியாக தற்போது இயக்குனர் அவதாரம் பூசி தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக ‘பவர் பாண்டி’ மூலம் களம் கொண்டிருக்கிறார் தனுஷ். படத்தின் விமர்சனத்தை காணலாம். 

பவர் பாண்டியாக வருகிறார் நல்லி எலும்பு புகழ் ‘ராஜ்கிரண்’. தனது மனைவிக்குப் பிறகு தனது மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், ஒரு பேரன், ஒரு பேத்தி என ஒரு வீட்டில் வசித்து வருகிறார். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி என முன்னனி நடிகர்களுடன் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ராஜ்கிரண். 

வீட்டில் ராஜ்கிரணை, பிரசன்னா பாசமாக வைத்திருந்தாலும் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் பிரசன்னாவை டென்ஷன் செய்வதால் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் மகனுக்கும் தந்தைக்கும். 

எல்லாம் இருந்தும் ராஜ்கிரணுக்கு ஏதோ கூண்டிற்குள் அடைபட்டு இருப்பது போல் ஒரு ஃபீல், இதனால் தொலை தூரம் செல்ல முடிவு செய்கிறார் ராஜ்கிரண். இதற்காக ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு நெடுந்தூர பயணம் செல்லும் போது அவரது வயதில் உள்ள சிலரை சந்தித்து பேசும் போது சிறு வயதில் ஏற்பட்ட தன்னுடைய முதல் காதலை அவர்களிடம் கூறுகிறார் ராஜ்கிரண். 

ப்ளாஷ் பேக்கில் சிறுவயது ராஜ்கிரணாக வருகிறார் தனுஷ். அவருக்கு நாயகியாக மடோனா செபஸ்டின். இந்த ப்ளாஷ் ஃபேக் முடிந்ததும் தன்னுடைய முன்னாள் காதலியை தேடி செல்கிறார் ராஜ்கிரண். தன் காதலியை கண்டுபிடித்தாரா?? அதன் பின் என்ன ஆனது என்பதை ஒரு எமோஷ்னல் ட்ரீட்டாக படைத்திருக்கிறார் இயக்குனர்  தனுஷ். 

தமிழ் சினிமாவில் வாழும் சிவாஜி கணேஷன் நான் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் ராஜ்கிரண். எத்தனை விருதுகளை வேண்டுமானாலும் அள்ளி அள்ளி கொடுக்கலாம் இவரது நடிப்பிற்கு. தனது மகன் மீது பாசம் காட்டும் தந்தையாக இருக்கும் இடத்திலும் சரி, தனது பேரக்குழந்தைகளுக்கு அன்பை வாரி இறைக்கும் தாத்தாவாக வாழும் இடத்திலும் சரி நடிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார் ராஜ்கிரண். 

இளம் வயது ராஜ்கிரணாக வரும் தனுஷின் காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் பயணம். இந்த பயணம் அழகான கிரமாத்தை சுற்றி பயணிக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் தனுஷ் என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார். 

அழகாக வருகிறார் மடோனா செபஸ்டீன். என்னதான் கிராமத்து சாயம் பூசினாலும் மடோனாவை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றுக் கொள்ள மனம் சற்று தயங்குகிறது. 

தனது தந்தை இருக்கும் போது சரியாக கவனித்துக் கொள்ளாமல், அவர் காணாமல் சென்ற பிறகு பிரசன்னா தவிக்கும் தவிப்பில் அப்ளாஷ் அள்ளுகிறார் பிரசன்னா. 

’ஏன் மழையில நனையிற வா குடைக்குள்ள வா... நீ ஏன் குடைக்குள்ள நிக்கிற வா..வெளிய வா’ மழையில நனையாத வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையா’

’நம்ம குழந்தைகள் தான் வாழ்க்கை என்று நாம இருக்கிறோம், ஆனால், அவர்களின் வாழ்க்கை நாம் இல்லையே’

என்று படத்தில் பல வசனங்கள்... அனைத்திற்கும் கைதட்டல் தான்.. வசனங்களிலும் தனுஷ் பாராட்டை தட்டிச் செல்கிறார். 

வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு அருமை. தனுஷின் கிராமத்து பயணத்தை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். 

படத்தின் மிகப்பெரிய பலம் என்று தான் கூற வேண்டும், இவர் இல்லை என்றால் படத்தின் நிலைமையை யோசிக்க முடியவில்லை.. அவர் யார் என்றால் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான். 

படத்தின் இரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியெடுத்திருக்கிறார். மாஸ் இசையிலும், க்ளாஸ் இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார் அனைத்து பாராட்டுகளையும் தனி ஒருவனாக தட்டிச் செல்கிறார் இசையமைப்பாளர். 

க்ளைமாக்ஸ் காட்சிகள் - சூப்பர்

தனுஷ் ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். படம் பார்த்த பிறகு தாய், தந்தை மீது அனைவருக்கும் நிச்சயம் ஒரு மரியாதை வரும்.

பவர் பாண்டி - நிச்சயம் பார்க்க கூடிய ஒரு ப(பா)டம்...

Rating :

0 1 2 3 3.2/5
share