Movie Reviews

  • Home/
  • Reviews/
  • புகழ் படம் விமர்சனம்

புகழ் படம் விமர்சனம்


எங்கு தவறுகள் நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும் என்று அப்பா, மாமா இருவரின் கூற்றிற்கு ஏற்ப நேர்மையாகவும், ஊருக்கு எதாவது என்றால் முதல் ஆளாய் நிற்பதுமென துடிப்பான இளைஞனாக வருகிறார் ஜெய். தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரின் மைதானத்தில் விளையாடுவதும், பொழுது போக்குவதும் என அந்த இடத்தில் மட்டுமே பொழுதினை கழிக்கின்றனர் அனைவரும்.

அமைச்சர் ஒருவர் அந்த மைதானத்தில் ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு லோக்கல் அரசியல்வாதி உதவியுடன் களத்தில் இறங்குகிறார். இதனால் ஜெய் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்க்கின்றார். லோக்கல் அரசியல்வாதி தனது அரசியல் மூளையை செயல்படுத்தி ஜெய்யின் நெருங்கிய நண்பர் ஒருவரை அந்த தொகுதியில் கவுன்சிலராக ஜெயிக்க வைத்து அந்த மைதானத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

பல சோதனைகளை கடந்து அந்த மைதானத்தினை அரசியல்வாதிகளிடம் இருந்து ஜெய் கைப்பற்றினாரா??? என்பதே மீதிக்கதை...

கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தினை இது பிரதிபலித்தாலும் தனக்கென ஒரு பாதையில் இந்த “புகழ்” நடைபோடுவது தனித்துவமானது.. ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் போன்ற ஜெய்யின் வெற்றி படங்களின் வரிசையில் புகழும் சேரும் என்பதில் சந்தேகமில்லை.. ஒரு ஏரியாவின் துடிப்பான இளைஞனாக வருவதிலும் சரி, வீட்டிற்கு அடக்கமான ஒரு மகனாக வருவதிலும் சரி, நண்பனுக்கு எதுவேண்டாமானாலும் செய்யக்கூடிய ஒரு மனப்பக்குவமான நண்பனாக வருவதிலும் சரி ஜெய் அசத்தியிருக்கிறார்..

ஜெய் உடனான காதல் காட்சியில் சுரபி அழகாக தெரிகிறார். ஆனாலும் விக்ரம் பிரபுவுடன் “இவன் வேறமாதிரி” படத்தில் நடித்த போது இருந்த ஏதோ ஒன்று அவரிடம்  தொலைந்து போன ஒரு பீல் வருகிறது. ஆர் ஜே பாலாஜிக்கு பெரிய அளவில் காமெடி பண்ணுவதற்கு இடம் வைக்கவில்லை என்றாலும் அவர் வரும் ஒரு சில இடங்களிலும் சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார்...

காமெடி படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு குணச்சித்திர பாத்திரத்தில் ஜெய்யின் அண்ணனாக வந்து அசத்திய கருணாஸுக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.. தன் குடும்பத்தை பற்றி கவலைப்படுவதிலும் சரி, தன் தம்பி ஜெய்யை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல அவர் மெனக்கெடுவதும், அழுவதும் என நடிப்பினை செம்மையாக பூர்த்தி செய்கிறார் கருணாஸ்..

வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.. முதல் ஒரு பாடலை தவிர பாடல்கள் பெரிதாக எழவில்லை என்றாலும் பின்னனி இசையில் கவனத்தை செலுத்தி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் விவேக் மெர்வின்..

படத்தின் வசனங்கள் பல இடங்களில் கைதட்ட வைக்கிறது.. இப்போதைய அரசியல் நிகழ்வில் என்ன நடக்கும் என்பதை அப்பட்டமாக ஒரு சில இடங்களில் காட்டியதற்காக இயக்குனரை பாராட்டலாம்..

ஒரு யதார்த்தமான நடிகராக ஜெய் நடித்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒரு பெரிய மாஸ் நடிகரை போன்ற பில்டப்புகளை கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... ஒரு சில இடங்களில் திரைக்கதை சற்று இடித்தாலும் ஜெய்யின் ”புகழ்” இந்த படத்தில் நிச்சயம் புகழ் பாடும்..

மொத்தத்தில் ஜெய்யின் புகழாரம் பாடும் இந்த “புகழ்”.....

Rating :

0 1 2 3/5
share