Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சைத்தான் படம் விமர்சனம்

சைத்தான் படம் விமர்சனம்


பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ‘சைத்தான்’. மாஸ் ஓபனிங் காட்சியின் அவதாரமாக உருவெடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு சைத்தான்  எந்த அளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

ஒரு மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் விஜய் ஆண்டனி.  அனாதையாக வாழ்ந்து வரும் அருந்ததியை திருமணம் செய்து கொள்கிறார் விஜய் ஆண்டனி. இவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் போது, அவ்வப்போது விஜய் ஆண்டனிக்கு மட்டும் ஒரு குரல் ஒலித்துக் கொண்டு அவரை டார்ச்சர் செய்கிறது.

’செத்து போய் விடு.. செத்து போய் விடு’ என்று தொடர்ந்து அந்த குரல் விஜய் ஆண்டனியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பித்து பிடித்தவர் போல் திரிகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனியின் பாஸ் ஒய்.ஜி.மகேந்திரன் அவரை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் செல்கிறார்.

அங்கு விஜய் ஆண்டனியின் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் அனைத்தும் வருகிறது. தனது முந்தைய ஜென்மத்தில் தஞ்சாவூரில் வாழ்ந்ததாகவும், ஜெயலெட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவள் தன்னை அடித்து கொன்று விட்டதாகவும் கூறுகிறார் விஜய் ஆண்டனி.

இதை நிரூபணம் செய்ய விஜய் ஆண்டனி, தஞ்சாவூர் செல்கிறார், அங்கு அவரது பூர்வ ஜென்ம வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்கிறார்.மீண்டும் சென்னைக்கு வந்து சிகிச்சை பெறுகிறார் விஜய் ஆண்டனி. அந்த சமயத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்து  விஜய் ஆண்டனியை விட்டு பிரிந்து செல்கிறார் அருந்ததி. 

அருந்ததியை தேடி செல்லும் சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தெரிய வருகிறது. கடைசியாக அருந்ததியை விஜய் ஆண்டனி கண்டு பிடித்தாரா..?? அவருக்கு என்னதான் நடக்கிறது ..?? என்பதை மிகுந்த படபடப்போடு மிக வித்தியாசமாக ஒரு கதையோட்டத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. 

விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலாகவும், மிகவும் அபாயகரமானதாவும் தான் இருக்கும். அந்த வகையில் இதிலும் ஒரு சவாலான கதாபாத்திரம் தான். பித்து பிடித்தவன் போல் திரியும் காலத்தில், முக பாவனைகளில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் அனைத்தும் க்ளாஸ். அதிலும் அந்த முன் ஜென்ம கதாபாத்திரம் மிக கம்பீரமான பொருத்தம்.  

நாயகி அருந்ததிக்கு பல இடங்களில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தியும் இருக்கிறார் அவர். முன் ஜென்ம கதாபாத்திரத்திலும் மிக சரியான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், சாருஹாசன் என படத்தில் நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பை மிகச் சரியாக தந்துள்ளனர். 
 
படம் முழுவதும் திகில் ஒட்டத்திற்கு எந்த வித பஞ்சம் இல்லாமல் நகர்வது அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. முதல் பாதியின் வேகம் அனைவரையும் மிரட்டுகிறது. இரண்டாம் பாதியிலும் அதே வேகத்தை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விஜய் ஆண்டனியின் இசையில் ஜெயலெட்சுமி என்ற பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னனி இசையில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. பிரதீப் கலிபரயுத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் மிரள வைக்கின்றன. 

சைத்தான் -  நிச்சயம் மிரட்டுவான்...

Rating :

0 1 2 2.8/5
share