சிவலிங்கா படம் விமர்சனம்


பேய் கதைக்கும் ராகவா லாரன்ஸுக்கும் எப்போதுமே ஒரு நல்ல ராசி தான். முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என தொட்ட பேய்க் கதைகள் அனைத்தையும் ஹிட் கொடுத்து விட்டு, கமர்ஷியல் இயக்குனர் பி வாசுவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு பேய் கதை பக்கம் திரும்பியுள்ளார் லாரன்ஸ். தனது மகன் சக்தி மற்றும் லாரன்ஸை வைத்து இந்த ‘சிவலிங்கா’வை இயக்கியுள்ளார் இயக்குனர் பி வாசு. 

விமர்சனம்:

படத்தின் ஆரம்பத்திலேயே சக்தி ஓடும் ரெயிலில் இருந்து ஒருவரால் தள்ளப்பட்டு கொல்லப்படுகிறார். 

சக்தி தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கிறது. சக்தியின் காதலியோ சக்தி தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்று இது கொலை தான் என நிரூபிக்க போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை நாடுகிறார். அந்த உயரதிகாரியால் வழக்கு சிபிஐ வழக்காக மாறுகிறது. 

வழக்கை விசாரிக்கிறார் சிபிஐ அதிகாரி லாரன்ஸ். வழக்கு விசாரிக்கப்படும் போது சக்தியின் ஆவி லாரன்ஸின் மனைவி ரித்திகா உடம்பிற்குள் புகுந்து விடுகிறது. தன்னை யார் கொலை செய்தார்கள் என்பதை நீ கண்டுபிடிக்கும் வரை உன் மனைவி உடம்பில் இருந்து செல்ல மாட்டேன் என சக்தி லாரன்ஸிடம் மிரட்டுகிறார். 

கொலைகாரனை கண்டுபிடித்து சக்தியின் ஆவியிடம் இருந்து தனது மனைவியை லாரன்ஸ் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. 

வழக்கம் போல் பேய்க்கு பயப்படுகிற கதாபாத்திரம் தான் லாரன்சுக்கு. இந்த படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லாரன்ஸ். தேவைக்கேற்ப ஒரு ஆக்‌ஷன், நடனம் என  அனைத்திலும் லாரன்ஸ் அசத்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் விசாரணை காட்சிகளில் அசத்தியிருக்கிறார் லாரன்ஸ். 

தமிழில் மூன்றாவது படமாக ரித்திகா சிங் இதில் நாயகியாக நடித்திருக்கிறார். இறுதி சுற்றில் பார்த்த ரித்திகாவா இது.? என கேட்கும் அளவிற்கு சற்று கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறார்... கவர்ச்சி வேண்டாமே ரித்திகா.. சக்தியின் ஆவி ரித்திகாவின் உடம்பிற்குள் புகுந்ததும் ரித்திகாவின் பேயாட்டம் மிரள வைக்கிறது. 

சக்தி இதுவரை நடித்த படங்களிலே சிறந்த படம் எது என்றால் சிவலிங்கா தான் என தைரியமாக கூறலாம். அந்த அளவிற்கு ஒரு சிறப்பான, கதையோடு ஒன்றிய ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். 

 இதற்கு முன் பார்த்த, சுவைத்த கதை தான் மீண்டும் திரைக்கு வந்திருக்கிறது. பேய்களில் நல்ல பேய், கெட்ட பேய் என ஆராய்ச்சி நடத்த வேண்டியிருக்கிறது. 
யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே  சாதாரணமாகவே யூகிக்க முடிவது படத்திற்கு ஏற்பட்ட சில சறுக்கு தான். 

படத்தினை சற்று அலுப்பில்லாமல் கொண்டு சென்றது வடிவேலு தான். திருடனாக வீட்டிற்குள் வந்து லாரன்ஸிடம் வேலைக்காரனாக மாட்டிக் கொள்கிறார் வடிவேலு.   , லாரன்ஸின் அம்மா ஊர்வசியுடன் வடிவேலு சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் காமெடி சரவெடி. 

 ஜெயபிரகாஷ்,  பானுப்ரியா, சாரா, ப்ரதீப் ராவேத், ஜாகீர் உசேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.. 

சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவு மிரள வைக்கிறது. தமனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் அவ்வளவாக மிரட்டப்படவில்லை. 

காஞ்சனா படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் லாரன்ஸ் ரசிகர்களுக்கு இந்த கதை போரடிக்காது. 

சிவலிங்கா - கொஞ்சம் மிரட்டல்...


Rating :

0 1 2 2.8/5
share