தரமணி படம் விமர்சனம்



இயக்குனர் ராமின் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ‘தரமணி’. வழக்கமான படங்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்பதை படத்தின் போஸ்டர்களே கூறியிருக்கும். 

கதையை வித்தியாசமாக கூறுவதில் இயக்குனர் ராம் ஒரு தனித்துவம் வாய்ந்தவர் என்பதை இதற்கு முன் இவர் எடுத்த படங்கள் கூறியுள்ளன. அந்த வரிசையில் ‘தரமணி’ எந்த வகையான கதை என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. காதலியால் கைவிடப்பட்ட தனிமைபடுத்தப்படுகிறார் வசந்த் ரவி. ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறுகிறார்கள்.

வழக்கம்போல் ஆண்களுக்கே உரித்தான சந்தேக குணம் வசந்த் ரவியை ஆட்டிப் படைக்கிறது. தொட்டதெற்கெல்லாம் ஆண்ட்ரியா மீது சந்தேகத்தை வைக்கிறார் வசந்த் ரவி.     

இந்த சந்தேக அலை அவர்களது காதலை எவ்வாறெல்லாம் சிதைக்கிறது.    மீண்டும் இந்த காதல் கைகூடி வாழ்க்கை பிரகாசித்ததா..?? என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். 

தனி ஒரு பெண்ணாக மொத்த படத்தையும் சுமந்து செல்கிறா ஆண்ட்ரியா. கணவனை பிரிந்த ஒரு பெண் இந்த சமூகத்தில் படும் இன்னல்களை என்ன என்ன என்பதை கண்முன்னே நிறுத்துகிறார் ஆண்ட்ரியா. 

காதல், மோதல், கசப்பு, எதிர்ப்பு, என எல்லா உணர்ச்சிகளையும் ஒருமித்தமாக நிறுத்துகிறார். 

எங்களுக்கும் புகைப்பிடிப்பதற்கான காரணம் இருக்கு என கூறி கெத்தாக ஆண்ட்ரியா கூறும் காரணம் மாஸ்.

வசந்த் ரவி ஒரு யதார்த்தமான மனிதனாக கதை முழுவதும் பயணம் செய்கிறார். ஆண்களின் அற்ப குணம் சிலவற்றையும் தனது இயல்பான நடிப்பில் வெளிப்படுத்திவிட்டு செல்கிறார். காதலித்தவனை விட்டுச் சென்று சொகுசான ஒரு வாழ்க்கையை தேடிச் செல்லும் கதாபாத்திரமாக அஞ்சலி. 

மீண்டும் தான் காதலித்தவனை பார்க்கும் போது, ‘ உன்னை மாதிரி ஒரு நல்லவன நான் பார்த்ததில்லை’ என அஞ்சலி கூறும் போது பொய்யான காதலர்களுக்கு விழும் ஒரு சவுக்கடியாக இருக்கிறது. 

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையில் உள்ள தரமணியை அழகாக காட்டியிருக்கிறது. 

ஆண்கள் பெண்கள் மீது எழும் சில சந்தேகக் கேள்விகளுக்கு சில காட்சிகள் மூலம் தெளிவான விடையை இயக்குனர் ராம் சொல்லி செல்கிறார். ஏரியில் அடுக்குமாடி குடியிருப்பு, விவசாய இடங்கள் அழிப்பு, தமிழக மீனவர்கள் படுகொலை என அவ்வப்போது ஒலிக்கும் ராமின் குரல்கள் கைதட்ட வைக்கின்றன.  வழக்கமான சினிமா பார்முலா இல்லாமல் ஒரு அழகான காவியமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர் ராம். 

துணிச்சலான சில வசனங்கள் எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றன. 

தரமணி - தரமான மணி (காதலர்களுக்கு) தான். 

Rating :

0 1 2 3/5
share