Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தெறி படம் விமர்சனம்

தெறி படம் விமர்சனம்

இளைய தளபதி விஜய்யின் அதி பிரம்மாண்ட எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் தெறி.  இன்று உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ஒரு திருவிழாவினை போன்று உலகம் முழுவதும் ஒரு அலைகளை ஏற்படுத்திய இந்த தெறி ஆட்டத்தை தற்போது விமர்சனமாக காணலாம்..

விமர்சனம்: 

ஒரு குழந்தையின் தகப்பனாக  நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் விஜய். விஜய்யின் மகளாக வருகிறார் மீனாவின் மகள் நைனிகா. நைனிகாவின் டீச்சராக வருகிறார் எமி ஜாக்‌ஷன். தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறார் விஜய். கேரளாவில் உள்ள ஒரு ரவுடியால் பிரச்சனை வர அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய். அமைதியான விஜய்க்குள் இப்படி ஒரு மிருகத்தனமான கோபம் எப்படி என எமி கேட்க.. கதை செல்கிறது சில வருடங்களுக்கு முன்னாள்.  

ஸ்மார்ட்டான, நேர்மையான, எதற்கும் அஞ்சாத ஒரு உயர் போலிஸ் அதிகாரியாக வருகிறார் விஜய். சமந்தா ஒரு டாக்டராக வருகிறார். இருவரும் பார்த்த தருணத்தில் காதல் வருகிறது. காதல் வாழ்க்கை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ஆரம்பமாகிறது வில்லனுடன் மோதல்.

வில்லனாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவர் ஒரு எம் எல் ஏ-வாக வருகிறார். இவருடைய மகன், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை கற்பழித்துவிடுகிறார். இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறார் விஜய். கொலையாளியை கண்டுபிடித்து அவனை கொன்றும்விடுகிறார் விஜய்.

இதனால் கோபம் கொண்ட மகேந்திரன் விஜய்யை பழிவாங்க துடிக்கிறார். அதற்காக சாவை விட மேலான ஒரு தண்டனை உனக்கு கொடுப்பேன் என விஜய்யிடம் கூறுகிறார் மகேந்திரன். இதற்கிடையில் விஜய், சமந்தாவிற்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது.

பின் விஜய் குடும்பத்தையே கொன்றுவிடுகிறார் மகேந்திரன். தன் குழந்தையுடன் தப்பி பிழைத்து கேரளாவில் வாழ்ந்து வருகிறார் விஜய். பின், விஜய் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் அவரை துரத்த மீண்டும் விஜய் ஆடும் ஆட்டம் தான் இந்த தெறி...

இளையதளபதியின் பயணத்தில் அதகள பெர்பார்மண்ஸ் படம் தெறி என கூறலாம். குழந்தையுடன் பாசத்தை காட்டும் தந்தையாக வருவதிலும், ராதிகாவிற்கு நல்ல ஒரு மகனாக வருவதிலும், சமந்தாவுடன் காதல் காட்சிகளிலும், மனைவி மீது பாசம் காட்டுவதிலும் தன் நடிப்பினை செவ்வென பூர்த்தி செய்திருக்கிறார் விஜய்.

சமந்தா மிகவும் அழகாக தெரிகிறார். கடைசி தருணத்தில் விஜய்யுடன் தன் நடிப்பை அழகாக காட்டுவதிலும் சரி, பாடல் காட்சியில் விஜய்க்கு ஜோடி போட்டு ஆடும் ஆட்டத்திலும் சரி செம ஸ்கோர் செய்திருக்கிறார் சமந்தா.

எமியை பற்றி கூற வேண்டும் என்றால்.... எதற்காக இந்த எமி??? மகேந்திரனின் நடிப்பு அருமை. அளவான பேச்சும், குழந்தைத்தனமான சிரிப்பும் ஒரு வில்லனுக்கே உரித்தான ஒரு தோரணையாக வந்திருக்கிறார்.  குழந்தை நைனிகாவின் நடிப்பு மிகவும் அருமை. தெறி பேபி... அடுத்த மீனா ரெடி... கோலிவுட்டை நிச்சயம் கலக்குவார் இப்போதிலிருந்தே...

இவர்கள் போக ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள் என அனைவரின் நடிப்பும் அருமை தான். கதை ஏற்கனவே பல படங்களில் பார்த்த வாசனை ஏற்பட்டாலும் அதை எடுத்திருக்கும் விதத்திற்கு அட்லியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் இங்கு படும் இன்னல்களை எடுத்துக் கூறிய விதம் அருமை. சில இடங்களில் கண்களில் கண்ணீரை ததும்ப வைத்து விடுகிறார் அட்லி.

ஜி வி பிரகாஷின் பாடல்கள் அனைத்தும் ஹிட். பின்னணி இசை பல படங்களின் இசையை தொட்டு வந்தாலும் படத்திற்கு தேவையான இசையாக தான் இருக்கிறது. 

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. விஜய்யின் அதகள பைட் காட்சிகள் அதிரடி காட்டுகின்றன. படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பக்காவாக அமைந்திருப்பது மேலும் கூடுதல் பலம். முதல் பாதியில் இருந்த ஒரு அதிவேகத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் இன்னும் நலமாயிருந்திருக்கும்.

தெறி - தெறியாட்டம் தான்...

Rating :

0 1 2 3 3.4/5
share