Movie Reviews

  • Home/
  • Reviews/
  • திருநாள் படம் விமர்சனம்

திருநாள் படம் விமர்சனம்


தொட்டதையெல்லாம் ஹிட்டடிக்கும் கைராசிக்காரராக சமீப காலத்தில் திகழும் நயன்தாரா “ஈ” படத்திற்கு பிறகு ஜீவாவுடன் இணைந்துள்ள இரண்டாவது படம் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது "திருநாள்".

தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளை  கைக்குள் வைத்துக்கொண்டு அங்கு எல்லா அராஜகங்களையும் அரங்கேற்றி வருகிறார் ரெளடி நாகா. இவரின் வலது கை ஜீவா.

நாகாவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் துவம்சம் செய்வது.. நாகாவை தீர்க்க நினைப்பவர்களை தீர்ப்பது என அப்பா, அம்மா இல்லாமல் வளரும் ஜீவாவிற்கு நாகாதான் எல்லாமுமாய் இருக்கிறார்.

ஆனால் நாகாவோ ஜீவாவை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைக்க வேண்டும் என்று தனக்கு விசுவாசமான ரௌடியாகவே வைத்திருக்கிறார்.

என்ன இழவோ இந்த ரௌடிகளைப் பார்த்ததும் தமிழ் சினிமா நாயகிகளுக்கு காதல் வந்து தொலைத்துவிடுகிறது. இந்தப் படமும் அந்தக் காட்சிகளுக்கு விதிவிலக்கல்ல.  பள்ளி ஆசிரியை நயன்தாரா ஒரு பாட்டிலேயே ரௌடி ஜீவாவை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.

இருவருக்குமான காதல் நாகாவிற்கும் நயனின் குடும்பத்திற்கும் தெரியவரும்போதே  நாகாவின் உண்மை முகமும் ஜீவாவிற்குத் தெரிய வருகிறது.

நாகாவை விட்டு வெளியேறுகிறார்.  நயனுடன் தனி வாழ்க்கைக்கும் தயாராகிறார் ஜீவா.

பின் நாகா எடுக்கும் முடிவுகள்,  காவல்துறையின் நெருக்கடிகள் என திருந்துகிற ரௌடிகள் நிம்மதியாக வாழ முடியுமா என்ற பரபர திருப்பங்களெல்லாம் கதையில் உண்டு. தீப்பொறியாக நிற்கும் ஜீவா, ஈர்க்கும் நயன் என ஆயிரம் இருந்தும் திரைக்கதை ஆங்காங்கே நொண்டியடிக்கிறது.

வெட்டு, குத்து, அடிதடி என எதற்கும் அஞ்சாதவராக ஜீவா  கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தன்னை ப்ளேடாகவே படம் முழுக்க வைத்திருக்கிறார். எடை குறைத்து முடிவளர்த்து என ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார். கொலைவெறிப் பார்வை, சட்டையில் இருந்து ப்ளேடை எடுக்கும் தோரணை என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார்.

தாவணியெல்லாம் போட்டு கிராமத்து நாயகியாக மாற முயற்சித்திருக்கிறார் நயன்தாரா. எதுக்கு இந்த வயசுல போய் என்ற கேள்வியும் முதிர்கன்னி நினைப்பும் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு நல்ல நடிகை வீணடிக்கப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பை மீட்டுத்தரும் என நம்புவோம். 

ரெளடியாக வரும் நாகா(சரத்) கோர்ட் சீனில் மிரட்டியதைப் பார்த்தால் பின்னாடி ஏதோ பெரிதாக இருக்கிறது போலும் என்ற நினைப்பை பின்வாங்கச் செய்து நார்மல் கட்டப்பஞ்சாயத்து ரௌடிதான் என முடங்கிவிடுகிறார். டப்பிங் வாய்ஸ் வேறு ஒட்டாமல் படுத்துகிறது. 

கருணாஸிற்கு நல்ல ரோல். எங்கே ஒரு சீனிற்குப் பிறகு காணலையேன்னு படம் முழுக்கத் தேடினால் க்ளைமாக்ஸை திருப்தியாக முடித்து வைக்கிறார்.

கோபிநாத் தோற்றத்திலும் வாய்ஸிலும் மிரட்டுகிறார். தவிர பெரிதாக வேலையொன்றுமில்லை. க்ளைமாக்ஸ் பக்கம் ஜீவாவை சுட உயர்த்திய துப்பாக்கியை மடக்கிவிட்டு நடந்து போவார் மனுசன், "ஏன்டா என்னை இந்த கேரெக்டர்ல நடிக்கவச்சீங்கன்னு" கேட்டுக்கொண்டு போவதுபோல எழும் மனப்பிரம்மையை தவிர்க்க முடியவில்லை.   

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதற்காக கேமிராவை தலைசுற்றிக்காட்டும் அரதப் பழசான டெக்னிக்கெல்லாம் வேண்டாம் சாமி.

பல படங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஸ்ரீ  பாடல்கள் மூலம் மனசில் நிற்கிறார். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இயக்குநர் ராம்நாத்! பலமான நடிகர்கள் இருந்தும், கதைக்களம் இருந்தும் திரைக்கதை பலமில்லாததால் பெரும் உழைப்பு வீணாகியிருக்கிறது. இதில் ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் வேறு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

திருநாள் - ஜீவாவிற்காக பார்க்கலாம்Rating :

0 1 2 2.5/5
share