Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தோழா படம் விமர்சனம்

தோழா படம் விமர்சனம்



இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக வருகிறார் நாகர்ஜுனா. இவர், தலைப்பகுதியை தவிர வேறு எந்த பகுதியும் செயல்படாத நிலையில் உள்ளார். திருட்டு, ஜெயில் என வாழ்க்கையை நடத்தி வரும் லோக்கல் பாயாக வருகிறார் கார்த்தி. 

விவேக்கின் உதவியோடு ஜெயிலில் இருந்து 4 மாத பரோலில் வருகிறார் கார்த்தி. நாகர்ஜுனாவை பார்த்துக் கொள்வதற்காக கார்த்தி செல்கிறார். அவருடைய துருதுரு நடவடிக்கைகளை பார்த்து கார்த்தியை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார் நாகர்ஜுனா.

நாகர்ஜுனாவின் செக்ரட்ரியாக அழகாக வருகிறார் தமன்னா.. நாகர்ஜுனாவின் உண்மையான சோகத்தை கண்டறிந்து அவரை சந்தோஷமாக வாழ வைக்கிறார் கார்த்தி, அதேபோல் கார்த்தியின் சோகத்தை கண்டறிந்து அவரது சோகங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்கிறார் நாகர்ஜுனா.. இப்படிப்பட்ட இருவருக்குமிடையேயான ஒரு உணர்ச்சிமிகு பாச போராட்டம் தான் இந்த தோழா...

சென்னையில் வாழும் ஒரு லோக்கல் பாயாக வந்து அசத்துகிறார் கார்த்தி..தமன்னாவுடனான காதல் காட்சிகளிலும் சரி, நாகர்ஜுனாவை பார்த்து அவரை கவனிப்பதிலும் சரி தனது நடிப்பினை காட்டி கைதட்டல் வாங்குகிறார். பிரகாஷ்ராஜ் மற்றும் விவேக்குடன் கார்த்தி அடிக்கும் காமெடிக் காட்சிகளுக்கு திரையரங்குகளில் சிரிப்பலைகள் சற்று அதிகமாகவே வருகிறது.. அதிலும் கார்த்தி வரைந்த ஒரு பெயிண்டிங்கை வைத்து வரும் காமெடி காட்சிகள் வயிறை பதம் பார்த்து விடுகிறது. கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கார்த்தி சற்று முன்னேற்றம் அடைந்திருக்கிறார் என்று கூறலாம். 

தெலுங்கில் நம்பர் ஒன் ஆக்‌ஷன் நாயகனாக வலம் வந்த ஒரு நாயகன் படம் முழுவதும் வீல் சேரில் இருந்து கொண்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதை முடித்தும் கொடுத்த நாகர்ஜுனாவிற்கு பலத்த கைதட்டல் கொடுக்கலாம். தனது கண் பார்வையிலையே பல காட்சிகளுக்கு முடிவு சொல்லும் போது, தமிழில் ஏன் இவர் அதிக படங்கள் நடிக்கவில்லை என நம்மை ஏங்க வைத்துவிடுகிறார் நாகர்ஜுனா. 

நாகர்ஜுனா, கார்த்தி மேல் உள்ள பாசத்தை கிடைக்கும் தருணங்களில் வெளிக்காட்டும் போதும், கார்த்தி, நாகர்ஜுனா மீதான பாசத்தை கிடைக்கும் தருணங்களில் வெளிக்காட்டும் போதும் என இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனது நடிப்பினை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

மாடல் உடையில் தமன்னா மிகவும் அழகாகவே தெரிகிறார். அவருக்கு பெரிதான நடிப்பு இல்லை என்றாலும் அவர் வரும் இடங்கள் வெள்ளை ரோஜா நடந்து செல்வது போன்ற ஒரு ஃபீல் வருகிறது.. தமன்னா மற்றும் ஸ்ரேயா கெஸ்ட் ரோல்களில் வந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள்..

நல்ல ஒரு அருமையான கதையை கையில் எடுத்து அதை நல்ல விதத்தில் திரைக்கதையாகவும் கொடுத்த இயக்குனர் வம்சிக்கு பாராட்டு மழை குவியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கூற வந்த கதையை சற்று கூட பாதையை விட்டு விலகாமல் அதே பாதையில் எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர். 

படத்தில் பாடல்கள் எந்த விதத்திலும் எடுபடவில்லை, பின்னணி இசையும் பெரிதாக இல்லை. இரண்டாம் பாதியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

”தோழா” - படம் பார்த்தால் நம் தோழனை இன்னும் அதிகமாக காதலிப்போம்....

Rating :

0 1 2 3 3.2/5
share