வல்லதேசம் படம் விமர்சனம்


பெண்களை பெருமைப்படுத்தும் , கெளரவப்படுத்தும் படம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் காலடி எடுத்து வைக்கும். அப்படியாக பெண்களை பெருமைபடுத்துவதாக வந்திருக்கும் படம் தான் வல்லதேசம்.

அனுஹாசன் மற்றும் நாசரின் நடிப்பில் நந்தா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘வல்ல தேசம்’. 

 கணவர் மற்றும் குழந்தையுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்கிறார் அனுஹாசன். சென்ற இடத்தில் அனுஹாசனின் கணவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மகளும் கடத்தப்படுகிறாள். எதற்காக இதெல்லாம் என விழியை விரிக்கும் போது நீண்டு செல்கிறது கதை. 

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பல சதி வேலைகளை செய்யவிருக்கும் தீவரவாத கும்பலை கண்டுபிடிக்கவும், அவர்களின் சதியை முறியடிக்கவும் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்டவர்தான் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவரான அனுஹாசன்.

அனுஹாசன் ஒரு இந்திய உளவாளி என அறிந்ததும் கதை, வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. ராணுவ வீரருக்கே உரித்தான ஒரு தோற்றம், நடை, கம்பீரம் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் அனு. 

தாயாக வரும் போது கனிவாகவும், தேசம் என வரும் போது வீர திருமகளாகவும் நிமிர்ந்து படையெடுக்கிறார். சண்டைக்காட்சிகளில் தீப்பொறியாக சுழல்கிறார். 

நாசரின் நடிப்பு வழக்கம் போல் அனைவராலும் பாராட்டும்  படியாக அமைந்துள்ளது. 80 சதவீத படப்பிடிப்பு லண்டனில் படமாக்கப்பட்டிருப்பதால் லண்டனின் பேரழகை இங்கேயே திரையில் பார்க்க கூடிய வாய்ப்பு .

பிரம்மாண்டமான காட்சிகள் அனைத்தும் ஆச்சரியப்படுத்துகிறது. அநேக படப்பிடிப்பு லண்டன் என்பதால் அந்த நாட்டு நடிகர் நடிகைகள், அதற்கேற்ற காட்சியோட்டம் என சேர்ந்துகொள்ள ஹாலிவுட் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்த உணர்வு.

படத்தோடு பயணம் செய்திருக்கிறது எல்.வி. முத்துக்குமாரசாமியின் பின்னனி இசை. படத்தின் கதை குறை கூறும்படியாக எதுவும் இல்லை. பெண்களின் சுதந்திரத்தையும் , பெண்களுக்கான வீரத்தையும் தூக்கி நிறுத்தியதற்காக இயக்குனருக்கு கூடுதல் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

வல்ல தேசம் - வலிமையான தேசம்.

Rating :

0 1 2 3/5
share