Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வெற்றிவேல் படம் விமர்சனம்

வெற்றிவேல் படம் விமர்சனம்


நண்பர்களுக்கு அறிவுரை, எதிரிகளுக்கு அறிவுரை என்று சசிகுமாருக்கென்று தனிவழி இருக்கு, அந்த அறிவுரையை கூட அளவாக பேசி மக்கள் மனதில் ஏற்றி வைத்துவிடுவார். அதில் வெற்றிவேல் எப்படி கொண்டு சென்றிருக்கிறார் என்பதை பார்த்து விடலாம்.

அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் இப்படியாக எளிமையான, அமைதியான ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. அப்பாவாக இளவரசு, மூத்த மகனாக சசிகுமார், இளைய மகனாக ஆனந்த் நாக். அப்பா இளவரசு ஒரு ஆசிரியர், சசிகுமார் படிப்பு வராமல் விவசாயம் செய்து வருகிறார், ஆனந்த் நாக் கல்லூரி படித்து வருகிறார்.

சசிகுமார், மியா ஜார்ஜை பார்த்த தருணத்தில் காதல் வந்துவிடுகிறது. ஒரு பாடலுக்கு பின்னர் மியா ஜார்ஜ் அவர்களுக்கும் சசிகுமார் மீது காதல் வந்து விடுகிறது. இந்நிலையில், சசிகுமார் தம்பி ஆனந்த் நாக் கல்லூரியில் பயிலும் வருஷாவை காதலித்து வருகிறார். சசிகுமார் ஊருக்கு பக்கத்து கிராமத்தில் ஊர்தலைவராக வாழ்ந்து வருகிறார் பிரபு. இவரின் மகள்தான் வருஷா. தன் ஜாதி, தன் இன மக்கள் என அமைதியான ஒரு கோபக்காரராக வருகிறார் பிரபு.

தன் பெண்ணை தன் ஜாதியில் உள்ள ஒருவருக்குதான் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார் பிரபு. இதன் பின் பெண்ணை கடத்துவதற்கு தன் நண்பர்களுடன் திட்டம் தீட்டி, வருஷாவை கடத்துவதற்கு பதிலாக மாறுதலாக நிகிலாவை கடத்தி விடுகின்றனர் சசிகுமார் நண்பர்கள். தன் பெண் ஓடி போய்விட்டாள் என தவறாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் நிகிலா தந்தை.

சில இக்கட்டான சூழ்நிலையில் நிகிலாவை திருமணம் செய்து கொள்கிறார் சசிகுமார். தன் தம்பி ஆனந்த் நாக்கிற்கு வருஷாவை திருமணம் செய்து வைத்தாரா??? மியா ஜார்ஜ்ஜின் நிலைமை?? பிரபுவை எப்படி எதிர்கொள்கிறார். இது தான் சசிகுமாருக்கான சவால்... இது போதாதென்று பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பகை காரணமாக வில்லியாக அவதாரம் எடுக்க, இவரையும் சசிகுமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதி கதை..

வழக்கமான நாடோடிகள், சுந்தர பாண்டியன் தோரணையில் களமிறங்கியிருக்கிறார் சசிகுமார். படத்தின் முழுக்கதையும் இவரே சுமந்து செல்கிறார். காதல் மூடுக்கு இன்னும் நீங்க பார்ம் ஆகணும் சசிகுமார் அண்ணே.... மற்றபடி செண்டிமெண்ட், சண்டை காட்சிகள் என அனைத்திலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். 

சசிகுமாருடன் காதல் கொஞ்ச நேரமே, அதை நன்றாகவே செய்திருக்கிறார் மியா ஜார்ஜ். நிகிலா, வருஷா என இருவரும் தங்களுக்கான பகுதியை திருப்திகரமாக செய்திருக்கிறார்கள். அதிலும் நிகிலா தனது நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார். 

ஊர்த்தலைவராக வரும் பிரபு, அமைதியான, அதே நேரத்தில் சற்று கோபத்தை காட்டும் கெளரவக்காரராகவும் வந்து மிரட்டுகிறார். இவரை விட அதிகமாக மிரட்ட வருகிறார் விஜி. இவர்கள் இருவருக்கும் ஏற்ற ஒரு கதாபாத்திரம் தான். 

தம்பி ராமையா அவர்கள் காமெடி இடத்தை நிரப்பினாலும், குடும்பங்கள் ரசிக்கும்படியான ஒரு கதையை கொடுத்துவிட்டு டபுள் மீனிங் காமெடி காட்சிகள் முகம் சுழிக்க வைத்துவிடாதா இயக்குனரே???

இமான் இசையில் ”உன்ன போல” பாடல் மட்டும் சற்று ரகம், பின்னனி இசை பரவாயில்லை என்று தோன்றுகிறது. கதிரின் ஒளிப்பதிவு அருமை.

முதல் பாகத்தில் இருந்த வேகம் இரண்டாம் பாகத்தில் இல்லாதது, சசிகுமார் மற்றும் மியாஜார்ஜ்ஜுடன் காதலில் வலு இல்லாமல் இருந்தது, அடுத்த காட்சியை யூகிக்க முடிவது இவை அனைத்தும் சற்று சரி செய்திருக்கலாம். வசந்த மணியின் வசனங்கள் படத்திற்கு பலம்..

வெற்றிவேல் - குடும்பங்கள் வெற்றி நடை போடும்...

Rating :

0 1 2 2.8/5
share