விவேகம் படம் விமர்சனம்


தமிழகத்தில் மாஸ் ஓபனிங் காட்சிக்கான ஹீரோக்கள் என்றால் ஒரு சில பேர் தான். அந்த ஒரு சில பேரில் முக்கியமான ஒருவர் தல ”அஜித்” என்றால் மிகையாகாது. உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி அஜித்தின் சினிமா புத்தகத்தில் புது சாதனை படைத்து புது மாஸ் ஓபனிங் கொடுத்துள்ளது இந்த ’விவேகம்’. 

வீரம், வேதாளம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த விவேகம் ரசிகர்கள் அனைவருக்கும் சரியான தீணியாக இருந்ததா என்பதை விமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம். 

அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் காவல்துறை உளவாளி. எந்த ஒரு எதிரியையும் தன்னுடைய திறமையால் எளிதில் சாய்த்து விடுவார். நான்கு நண்பர்களுடன் சேர்ந்து எதிரிகளை எளிதில் சாய்த்துவிடும் திறமை படைத்தவர். 

அந்த நால்வரில் ஒருவர் விவேக் ஓபராய். செயற்கை முறையில் உலகத்தின் மூன்று இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து பெரும் பூகம்பம் ஏற்படுத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் திறமை, அக்‌ஷராஹாசனால் மட்டுமே முடியுமே. அவரை தேடி அஜித் அலையும் போது பல அசம்பாவிதங்கள் நேர்கிறது. அந்த அசம்பாவிதங்களை அஜித் எவ்வாறு முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

அஜித் என்ற ஒருவரை நம்பியே முழு படமும் பயணம் செல்கிறது. அஜித் ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதையும் சுமந்து செல்கிறார். தனது சாமர்த்தியத்தால், எதிரிகள் நினைக்கும் முன் அந்த திட்டத்தை தான் நினைத்து முறியடிப்பது, எதிரிகளை வீழ்த்துவது, துப்பாக்கிகளை கையாளும் விதம், ஒரு உயர்ந்த அதிகாரிக்கான ஒரு நடை, பாவணை என அனைத்தும் அஜித்திற்கே உரிய ஒரு பாணி. 

காஜல் அகர்வால் அழகான ஒரு குடும்ப பெண்மணியாக வந்து செல்கிறார். நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சண்டைக்காட்சியில் காஜல் அகர்வாலின் முக பாவனைகள் நடிப்பின் உச்சம். 

ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றாலும் நடிப்பில் தனது திறமையை காட்டியுள்ளார் அக்‌ஷரா ஹாசன். இன்னும் கொஞ்ச காட்சிகள் வைத்திருக்கலாமே என்று தோன்றியது. 

படத்தில் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய இடங்கள் பல உள்ளன. சண்டைக்காட்சிகள் அனைத்திலும் அஜித் விவேகம் காட்டாமல் வேகத்தை காட்டியுள்ளார். மிரட்டலின் உச்சம். 

கருணாகரன் காமெடி காட்சிகள் ஆங்காங்கே கொஞ்சம் கைகொடுத்துள்ளது. இசையில் பாடல்கள் ரகம், பின்னனி இசையில் காதை பதம் பார்த்து விடுகிறார் அனிருத். இண்டர்நேஷ்னல் ரேஞ்சுக்கு தனது இசையின் வித்தையை மொத்தமாக இறக்கிவிட்டுவிட்டார் போல. 

வெற்றியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூட கூறலாம் . தன்னுடைய கேமராவை சுழல சுழல வைத்துள்ளார். காட்சிகளை காட்டிய விதம் அருமை. 

இயக்குனர் சிவா ஹாலிவுட் தரத்தில் படத்தில் காட்சிகள் அமைத்தாலும், நம்மூர் சினிமாவுக்கு ஏற்ற ஒரு சில மசாலாக்களை ஆங்காங்கே தூவியிருந்தால் அனைத்து சென்டர்களிலும் படம் தூக்கி நிலை நிறுத்தப்பட்டிருக்கலாம். 

ரசிகனால் நிச்சயம் ரசிக்கப்படும் ஒரு படமாக தான் அமைந்திருக்கிறது.


விவேகம் - வேகம் கொண்டு விவேகம் போகவில்லை....    

Rating :

0 1 2 2.8/5
share