Movie Reviews

  • Home/
  • Reviews/
  • எமன் படம் விமர்சனம்

எமன் படம் விமர்சனம்


நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகி தனக்கென ஒரு பாதையை உருவாக்கி பயணித்துக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் இவரை இன்னொரு தளத்திற்கு எடுத்து சென்றது. இவரது நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘எமன்’. படத்தின் தலைப்பையே வித்தியாசமாக எடுத்துக் கொண்டு அதில் வெற்றிக்கனியை பறித்துக் கொண்டு செல்பவர் விஜய் ஆண்டனி மட்டும் தான்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1980 களில் அரசியலில் நல்ல ஒரு இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் விஜய் ஆண்டனி நண்பன் ஒருவனின் சதியால் முதுகில் குத்தப்பட்டு கொல்லப்படுகிறார். அவரது மனைவியும் சோகத்தில் இறந்து விட தாத்தாவின் அரவணைப்பில் குட்டி விஜய் ஆண்டனி வளர கதை 2011ற்கு நகர்கிறது. (டபுள் ரோல்)

தனது தந்தை சதியால் கொல்லப்பட்ட விபரம் எதுவுமறியாமல் வளர்கிறார் விஜய் ஆண்டனி. தனது தாத்தாவின் மருத்துவ செலவிற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட, அதற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார் விஜய் ஆண்டனி. சிறையில் மாரிமுத்துவின் பழக்கம் கிடைக்க அவர் மூலம் அரசியல் சாணக்கியனாக திகழும் முன்னாள் எம்.எல்.ஏ தியாகராஜனின் மனதில் இடம் பிடிக்கிறார் விஜய் ஆண்டனி. 

நட்பு போல் நடித்து பழகும் மாரிமுத்து மற்றும் ஜெயக்குமார் இருவரையும் பலியாக்கி தியாகராஜனிடம் மேலும் நெருங்குகிறார் விஜய் ஆண்டனி. தியாகராஜன் மூலம் மந்திரி அருள்ஜோதி வாயிலாக டாஸ்மாக் பார் ஒன்று விஜய் ஆண்டனியின் கைக்கு வருகிறது. 

மந்திரி அருள் ஜோதி தான் விஜய் ஆண்டனியின் தந்தையை சதியால் கொன்றவர். சிறிது நாட்களில் அரசியலுக்குள் நுழைய முயற்சிக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் கோபமான தியாகராஜன், மந்திரி அருள் ஜோதியோடு இணைந்து விஜய் ஆண்டனியை கொல்ல திட்டமிடுகிறார். இந்த அரசியல் விளையாட்டில் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்தாரா..?? எதிரிகளை எந்த விதமாக பந்தாடுகிறார் என்பதை மிகவும் நேர்த்தியான ஒரு கதை களத்தோடு கூறியிருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர். 

விஜய் ஆண்டனி வழக்கம் போல் ஒரு மாஸ் ஹீரோவிற்காக வேலைகளை மிக கச்சிதமாக செய்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் இவரது தோற்றங்கள் ரசிக்கும்படியாக உள்ளது. சண்டைக்காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். காதல் காட்சிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ”இந்த மூஞ்சில மட்டும் ஏன் ரொமன்ஸ் வர மாட்டேங்குது” என கேட்க வைக்கிறது. 

நிறைய காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்றாலும் வரும் காட்சிகளில் மிகவும் திருப்திகரமாகவே நடித்துள்ளார் மியா ஜார்ஜ். தனி பாடல் ஒன்றில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் சாணக்கியனாக வரும் தியாகராஜனின் கதாபாத்திரம் கதைக்கு மிகவும் ஏற்றது. தியாகராஜன் நகர்த்தும் ஒவ்வொரு காய்களும் அரசியல் வட்டாரத்தில் நடக்கும் விளையாட்டினை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். 

அமைச்சராக வரும் அருள் ஜோதியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால், கதையின் மற்றொரு மிகப்பெரிய பலம் என்றால் வசனம் மட்டுமே. ஒவ்வொரு வசனங்களும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கும் படியாகவும் செதுக்கியுள்ளார்கள். 

படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என்று தோன்றியது. பின்னனி இசையில் மிரட்டியிருக்கும் விஜய் ஆண்டனி பாடல்களில்  சொதப்பியிருக்கிறார், ‘என் மேல கை வச்சா..’ பாடலை தவிர. 

சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவையும் இயக்குனரே கையாண்டுள்ளதால் காட்சிகளில் நிறைவினை கொடுத்திருக்கிறார். 

‘எமன்’ - சகுனிகளின் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 


Rating :

0 1 2 3/5
share